அன்பான ரசிகருக்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சிம்பு!
ரசிகர்கள் தான் தங்களுடைய அபிமான ஹீரோவுக்கு போஸ்டர் ஒட்டுவது தான் வழக்கம்.
ஆனால் முதல் முறையாக இறந்து போன தனது அன்பான ரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பார்ப்பவர்களை நெகிழ வைத்திருக்கிறார் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிம்பு.
கடந்த வாரம் சிம்புவின் தீவிர ரசிகர்களில் ஒருவரும், மன்ற நிர்வாகியுமான மதன் என்பவர் எதிர்பாராமல் மரணம் அடைந்து விட்டார். அவரது மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டரை நண்பர்கள் ஒட்டிக் கொண்டிருந்ததை தற்செயலாக பார்த்த சிம்பு, உடனே அவர்களிடம் சென்று தானும் ஒரு போஸ்டரை வாங்கி அவரே சுவற்றில் ஒட்டியுள்ளார்.
சிம்புவின் இந்த செயலைப் பார்த்து ஆச்சரியமடைந்த சிம்புவின் ரசிகர்கள் ”இதுதான் சிம்பு, இவரைப் போல் வருமா? இவரிடம் மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பெரிய நடிகர் தன்னுடைய ரசிகனுக்காக தானே தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டியது அவரது ரசிகர்களிடையே சிம்பு மீதாக அன்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டுப் போன நகைச்சுவை நடிகர் விவேக் தனது ட்விட்டரில் ”தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது” என்று மனம் திறந்து பாராட்டும், அறிவுரையும் கூறியிருக்கிறார்.