‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன சிம்பு!
‘பார்ட்டி’ படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ‘மாநாடு’ படத்தை இயக்குவதாக அறிவித்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமானார்.
படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு முறை தேதி அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சிம்புவின் ஒத்துழைப்பு இல்லாததால் ‘மாநாடு’ படம் கைவிடப்படுவதாகவும், அதே ‘மாநாடு’ படத்தை வெங்கட்பிரபு இயக்க, வேறோருவரை கதாநாயகனாக வைத்து தயாரிக்கப் போவதாகவும் அறிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
அவரின் இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. சிம்புவுக்கு எதிராக அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.
அதே சமயத்தில் சென்ற வாரம் ‘மகா மாநாடு’ என்ற படத்தை தானே தயாரித்து இயக்கி நடிக்கப் போவதாக சிம்பு அறிவித்தார். இதற்கு முன்பு ‘வேட்டை’ உள்ளிட்ட சில படங்களும் இப்படி பிரச்சனையில் சிக்கி அறிவிப்போடு நின்று போனதால் அவருடைய அந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்களுக்கு திருப்தியை தரவில்லை.
இதனால் அதிர்ந்து போன சிம்பு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பிறந்த நாள் அன்று அவருக்கு போன் செய்து வாழ்த்து சொன்னவர் மீண்டும் ‘மாநாடு’ படத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும், என்னை வைத்து தான் நீங்கள் அந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என்று விரும்பி கேட்டதாகவும் தெரிகிறது.
ஆனால் ‘மாநாடு’ படத்திலிருந்து சிம்புவை நீக்கியது நீக்கியது தான். மீண்டும் அவரோடு சேர எண்ணமில்லை என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறாராம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.