தொரட்டி – விமர்சனம் #Thoratti
RATING – 3/5
நடித்தவர்கள் – ஷமன் மித்ரு, சத்யகலா, அழகு சுந்தர் ராஜ், முத்துராமன் மற்றும் பலர்
ஒளிப்பதிவு – குமார் ஸ்ரீதர்
இசை – வேத் சங்கர்
இயக்கம் – பி.மாரிமுத்து
என்னதான் ‘அபார்ட்மெண்ட்’ வாழ்க்கைக்காக நகரத்தை நோக்கி மனிதர்கள் நகர்ந்தாலும், எளிய கிராமத்து வாழ்க்கையில் இருக்கிற சுகம் வேறு எதிலும் இல்லை என்று தான் ஏக்கத்தோடு சொல்வார்கள்.
அதனால் தானோ என்னவோ கிராமத்து பின்னணியில் வெளியாகும் சில படங்கள் நம் ‘ஆகச்சிறந்த ரசனை’ லிஸ்ட்டில் ஒன்றாகி விடும்.
அண்மையில் வெளியான ‘நெடுநெல்வாடை’ படத்துக்குப் பிறகு அப்படி ஒரு படமாக கிராமத்து மண் மணம் மாறாத படமாக ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘தொரட்டி’.
ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வரும் நாயகன் ஷமன் மித்ரு அந்த ஊரைச் சுற்றி சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வரும் மூன்று பேர்களுடன் நட்பாகிறார்.
காலப்போக்கில் அவர்கள் சகவாசம் மித்ருவையும் குடிகாரனாக்கி விட, அதிலிருந்து அவனை மீட்டெடுக்க முறைப்பெண்ணான ஹீரோயின் சத்யகலாவை அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் அப்பா அழகு சுந்தர் ராஜ்.
ஒரு சந்தர்ப்பத்தில் மித்ருவின் நண்பர்களான மூன்று பேரையும் திருட்டு சம்பவம் ஒன்றில் சத்யகலா போலீசிடம் மாட்டிவிடுகிறார். இதனால் கோபப்படும் மூவரும் அவரை பழிவாங்க திட்டமிடுகிறார்கள்.
அதிலிருந்து சத்யகலா தப்பித்தாரா? கூடா நட்பு உள்ளிட்ட கெட்ட சகவாசங்களுக்கு மித்ரு குட்பை சொன்னாரா? இல்லையா என்பதே மீதிக்கதை.
முதல் காட்சியில் ஆரம்பித்து நிறைவுக் காட்சி வரை 1980-களில் நடக்கும் கிராமத்து அழகியலை அதன் மண் மணம் மாறாமல் அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து மனசை அள்ளிச் செல்கிறது.
தயாரிப்பாளர் ஷமன் மித்ரு தான் கதையின் நாயகன். புதுமுகமாக இருந்தாலும் கேரக்டருக்கு கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நட்பு பாராட்டும் போதும், குடிகாரனாக காட்சி தரும் போதும், பொண்டாட்டியின் அன்புக்கு அடங்கிப் போகும் போதும் என பல காட்சிகளில் கையில் மட்டை இல்லாமலேயே ‘சிக்ஸர்’ அடிக்கிறார்.
கிராமத்துப் பெண்களுக்கே உரிய முக லட்சணத்தோடு தைரியமும், துணிச்சலும் கொண்டவராக வருகிறார் நாயகி சத்யகலா. வட்டார வழக்கு மொழியை உச்சரிக்கிற விதத்திலும், கேரக்டரை உள்வாங்கி நடித்த விதத்திலும் 80களிம் நாம் பார்த்து ரசித்த கதாநாயகிகளை ஞாபகப்படுத்துகிறார். அதிலும் நிச்சயதார்த்த காட்சியில் அவர் காட்டும் கெத்து செம! செம!!
பல படங்களில் வில்லனாகப் பார்த்த அழகு சுந்தர் ராஜ் இந்தப்படத்தில் பாசம் காட்டும் நாயகனின் அப்பாவாக வருகிறார். கிராமத்தான் போல காலில் செருப்பில்லாமல் கட்டாந்தரையில் நடப்பதும், தன் ஒரே மகன் இப்படி குடிகாரனாகி விட்டானே? என்று கண்கலங்கும் போதும் நம்மை நெகிழ வைக்கிறார்.
அவர் உட்பட ஒரு சிலரைத் தவிர மீதி அத்தனை பேரும் புதுமுகங்கள் தான். அதிலும் வாய் பேச முடியாதவராக வருபவர் உட்பட நாயகனின் நண்பர்களாக வரும் மூவரும் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
தென் மாவட்டத்தின் வட்டார வழக்கில் “பத்து விரலு பாடுபட்டு அஞ்சு விரலால சாப்பிட்டாத்தா வயித்துல தங்கும்” உள்ளிட்டவை அர்த்தமுள்ள வசனங்கள்.
எளிய வாழ்க்கை, நட்பு, காதல், துரோகம், வஞ்சகம் என கிராமத்து மனிதர்களுக்கே உண்டான குணங்களுடன் காட்சிகள் நகர்ந்தாலும், மருந்துக் கூட காமெடிக் காட்சிகள் இல்லாதது ஏமாற்றமே.
என்றாலும் ஒரே ‘டைப்’ படங்களைப் பார்த்து பார்த்து எரிச்சலடையும் ரசிகர்களுக்கு ஒரு அழகான கிராமத்து வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து படம் பார்ப்பவர்களின் மனசை லேசாக்கிச் செல்கிறது ‘இந்த தொரட்டி’.
தொரட்டி – மண் வாசனை