மேடை நாடகங்களில் கிடைக்கும் ஆத்ம திருப்தி! : ஒய்.ஜி.மகேந்திரன் நெகிழ்ச்சி!

Get real time updates directly on you device, subscribe now.

YG

திரைப்படத்துறையில் எக்கச்சக்க படங்களில், பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்து மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்து விட்டாலும் இன்றைக்கும் மேடை நாடகங்கள் மீது குறையாத மோகத்தோடு இருக்கிறார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.

இவரது யுஏஏ என்கிற யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழு சார்பில் வருடத்துக்கு ஒரு புதிய நாடகம் என்கிற கொள்கையோடு மேடை நாடகங்களை தொடர்ந்து நடத்தி வரும் இவர் கடந்த 63 வருடங்களில் 64 நாடகங்களை அரங்கேற்றி விட்டார்.

தற்போது யுஏஏவின் 65 ஆவது நாடகமாக அரங்கேற இருக்கிறது ‘சொப்பன வாழ்வில்’ என்கிற புதிய நாடகம்.

வரும் 28-ஆம் தேதி சென்னையில் உள்ள சர் பிட்டி தியாகராயா அரங்கில் நடைபெற உள்ளது.

‘சொப்பன வாழ்வில்’ நாடகத்தில் ஒய்ஜிஎம் கதாநாயகனாக நடிக்கிறார். திரைப்பட நடிகையும், டிவி சீரியல் நடிகையுமான யுவஸ்ரீ இந்த நாடகத்தில் ஒய்ஜிஎம்-க்கு மனைவியாக நடிக்கிறார். இந்த நாடகத்தின் கதையை கோபு – பாபு எழுதியிருக்கிறார்.

இன்றைக்கும் நாடகங்களுக்கு மவுசு இருப்பதாக நினைக்கிறீர்களா? ஒய்ஜியிடம் கேட்டோம்…

Soppana Vazhvil Stage Show Press Meet Stills (1)

”கண்டிப்பாக, மேடை நாடகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. என் அப்பா ஒய்ஜி பார்த்தசாரதி அடிக்கடி சொல்லுவார். ”டேய் வருஷத்துக்கு ஒரு புது நாடகத்தைப் போடு. அரைச்ச மாவையே அரைக்காதேன்னு…” அவர் சொல்படி வருஷத்துக்கு ஒரு புதிய நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றம் செய்வது சந்தோஷமாக உள்ளது. எந்தக்கலை அழிந்தாலும் இந்த நாடகக்கலை அழியவே அழியாது.

இந்த உலகத்தில் நாங்கள் போகாத நாடுகளே இல்லை. அமெரிக்காவில் மட்டும் 12 தடவைகள் மேடை நாடகங்களை போட்டிருக்கிறோம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும் எங்களுடைய நாடகங்களை போட்டிருக்கிறோம். எல்லா நாடுகளிலும் மேடை நாடகங்களுக்கு வரவேற்பு இருக்கிறது.”

என்றவர் ‘சொப்பன வாழ்வில்’ நாடகத்தின் கதையைப் பற்றிச் சொன்னார்…

”நம்ம சமூகத்துல குள்ளமா இருக்கிறவங்களையும் கொஞ்சம் மனநிலை குன்றியவர்களையும் எல்லோரும் கேலி, கிண்டல் பண்ணுவாங்க. ஆனா அவங்களுக்கும் மனசு இருக்குன்னு நெனைக்க மாட்டோம். நடிகர் தேங்காய் சீனிவாசனிடம் வத்சல்னு ஒரு அசிஸ்டெண்ட் இருந்தார். அவர் கொஞ்சம் மனநலம் குன்றியவர் போலத்தான் இருப்பார். அவரை நான், கமல் சார் எல்லோரும் கலாய்ச்சிருக்கோம். அதை இப்போ நெனைச்சாலும் வருத்தமா இருக்கும். அப்படிப்பட்டவர்களோட மனசை புரிஞ்சிக்கிற மாதிரி இந்தக்கதை எனக்கு அமைஞ்சது.

கதையைக் கேட்கிறப்போ சீரியஸா இருந்தாலும் நாடகம் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி தான் இருக்கும். எந்த நாடகமாக இருந்தாலும் அதுல சுகர் கோட்டிங் பண்ணிக் கொடுக்கிறது தான் எங்களோட வழக்கம். அது இந்த நாடகத்திலேயும் இருக்கும். ரசிகர்களோட சிரிப்புக்கு நான் கியாரண்டி” என்றார்.

மேலும் இந்த மேடை நாடகங்களை நடத்துறதுனால எங்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த பலனும் இல்லாவிட்டாலும் மனசுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குது. அதுக்காக மட்டுமே தொடர்ந்து நடத்தி வருகிறோம் எங்களுக்கு இந்த நாடகங்களை தொடர்ந்து நடத்த பொருளாதார ரீதியில் இதன் பின்புலமாக இருக்கிறது ‘ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம். அவங்க நாடகக்கலையை வளர்க்கணும்னு நெனைக்கிறாங்க. அதுக்காக எங்களோட நாடகங்களுக்கு தொடர்ந்து உதவி செஞ்சிக்கிட்டு இருக்காங்க என்றார் நெகிழ்ச்சியுடன்!.