ஸ்ட்ராபெரி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Strawberry

ங்கே விட்டால் நாமும் கேரள நம்பூதிரியைத் தேடிப் போக வேண்டியிருக்குமோ…? என்று அச்சப்படுகிற லெவலுக்கு ரசிகர்களின் நிலைமை பேய்ப் படங்களின் பிடியால் கவலைக்கிடமாகி கிடக்கிறது.இந்த சூழலில் பாடலாசிரியர் பா.விஜய்யும் தனது இயக்குநர் ஆசைக்கு பேயை நம்பித்தான் இறங்கியிருக்கிறார்.

ஆவிகளுடன் பேசும் மீடியமாக இருக்கும் ஜோ மல்லூரியிடம் ஒரு ஆவி வந்து நான் ஒருவரிடம் பேசியே ஆக வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. அதன் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு தன் மகள் ஹீரோயின் அவ்னி மோடி மூலமாக அந்த ஆளைத் தேடிப்பிடிக்கிறார். அவர் தான் ஹீரோ பா.விஜய்.

அவ்வப்போது அந்த ஆவி வந்து பா.விஜய்யை பயமுறுத்தி விட்டுப் போகிறது. ”நீ பயப்படத் தேவையில்லை, அந்த ஆவி உன்னிடம் ஏதோ பேச ஆசைப்படுகிறது. நீ தைரியமாக இருந்து அதன் பேச்சை மட்டுமே கேள்” என்கிறார் ஜோ மல்லூரி.

அதற்காக இருக்கிற பேய்ப்படங்கள் அத்தனையையும் விடிய விடிய போட்டுப் பார்த்து பயத்தை போக்கிக் கொண்டு அந்த ஆவியை சந்திக்கத் தயாராகிறார்.

எதற்காக அந்த ஆவி பா.விஜய்யை சந்திக்க ஆசைப்பட்டது? அதற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பதை நெகிழ்வான காட்சிகளுடன் முடிக்கிறார்கள்.

ஹீரோவும் பா.விஜய் தான். ‘இன்னும் கொஞ்சம் நடிங்க பாஸ்’ என்று தான் சில காட்சிகளில் சொல்லத் தோன்றுகிறது. இதில் காமெடி வேறு செய்ய முயற்சிக்கிறார். இப்படி நடிப்பில் இன்னும் பல படிகளை ஏற வேண்டியவராக இருந்தாலும் ஒரு இயக்குநராக 14 மாடி எல்.ஐ.சி கட்டிடத்தையே தாண்டியிருக்கிறார்.

Related Posts
1 of 5

ஹீரோயினாக வரும் அவ்னி மோடி. ஸ்கோப் இருக்கிற காட்சிகளை கொடுத்தாலும் கூட பேருக்குத் தான் நடிப்பார் போல…

ரசிகர்களின் மொத்த கைதட்டல்களையும் இடைவேளைக்குப் பிறகு மொத்தமாக அள்ளிக்கொண்டு போகிறார் பேயாக வரும் குழந்தை யுவினா பார்த்தவி. அப்படி ஒரு சாந்தமான முகம். அதுவரை சிந்தாமல் சிதறாமல் இருக்கும் யுவினா பார்த்தவியின் கள்ளமில்லா வெள்ளைச்சிரிப்பு அடுத்த சில நொடிகளில் காணாமல் போகும் போது மனது பதைபதைக்கும் பாருங்கள்… அப்பப்பா… என்ன ஒரு நடிப்பு!

முகம் முழுக்க புன்னைகையுமாக பள்ளிக்கு செல்லும் அந்தக் குழந்தை அடுத்த சில நொடிகளில் விபத்தில் சிக்கும் போது முகம் இருகிப்போவது பா.விஜய்க்கு மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் தான்!

காமெடிக்கு ரோபோ சங்கர், மயில்சாமி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி என வரும் நால்வர் கூட்டணி நோகடிக்காமல் சிரிக்க வைப்பது நைஸ்.

குழந்தையை பறிகொடுக்கும் தம்பதிகளாக வரும் சமுத்திரக்கனியும், தேவயானியும் காட்சிக்கு காட்சி நிலைகுலைய வைக்கிறார்கள். அதிலும் ஹாஸ்பிட்டலில் குழந்தையைப் பார்த்து தேவயானி கதறி அழும் காட்சியில் எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சக்காரனும் கரைந்து விடுவான். நியாயத்துக்காக சமுத்திரக்கனி கடைசி வரை போராடுவதும், அதற்காக அவர் பேசும் வசனங்களும் கல்வி வியாபாரிகளுக்கு சரியான சவுக்கடி.

பேய்ப்படங்கள் என்றாலே பானைகளை உருட்டும் சத்தம், கதவுகளை வேகமாக அடைக்கும் சத்தம் என ரெகுலர் பின்னணி இசையை மூட்டைக் கட்டி விட்டு புதிதாக போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். அடிக்கடி ஆகாயத்திலிருந்து சென்னையை காட்டும் மாறவர்மனின் ஒளிப்பதிவு அந்த வானத்தைப் போலவே பிரம்மாண்டம்.

வருகிற ரசிகர்களை பயமுறுத்தி மட்டுமே வீட்டுக்கு அனுப்பினால் போதும் என்று ஒரு பக்கமாகவே யோசிக்கிற இயக்குநர்களுக்கு மத்தியில் நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கதையின் முக்கிய கருவாகக் கொண்டு சமூகத்துக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லியிருக்கிறார். அந்த சமூக அக்கறைக்காகவே இந்தாங்க பா.விஜய் உங்களுக்கு ஒரு ‘ஸ்ட்ராபெரி’ ப்ளேவர் சாக்லேட்!