”உங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு..” – கோலிசோடா 2 வில் தூள் கிளப்பிய ஸ்டண்ட் சிவா!
சினிமாவுக்கு வெளியே இருப்பவர்களுக்கே படங்களில் நடிக்க வேண்டுமென்கிற ஆசை இருக்கிற போது, பல வருடங்களாக சினிமாவுக்கு உள்ளே இருப்பவர்களுக்கு அந்த ஆசை இருக்காதா என்ன?
அப்படி ஒரு ஆசை முழுமையாக நிறைவேறி விட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ‘ஸ்டண்ட்’ சிவா.
‘காதலுக்கு மரியாதை’, ‘சேது’, ‘பிதாமகன்’, ‘நந்தா’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘கும்கி’ என பல வெற்றிப் படங்களில் இடம்பெற்ற அதிரி புதிரியான சண்டைக் காட்சிகளுக்குச் சொந்தக்காரர். இப்போதும் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழி படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பிஸியாக இருப்பவரை தனது ‘கோலி சோடா 2’ படத்தில் நடிகராக அறிமுகம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன்.
படத்தில் சீம ராஜா என்ற கேரக்டரில் சாதி சங்கத் தலைவராக வந்து நடிப்பில் தூள் கிளப்பியிருக்கும் ஸ்டண்ட் சிவாவுக்கு நாலா பக்கங்களிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அந்த சந்தோஷத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது ”நடிகனாகனும்கிற ஆசையில தான் சினிமாவுக்குள்ள வந்தேன். ஆனா ஸ்டண்ட் மாஸ்டரா ஆகிட்டேன். கெளதம் மேனன் சாரோட டைரக்ஷன்ல கமல் சார் நடிச்ச ”வேட்டையாடு விளையாடு” படத்தில் தான் முதன் முதலில் நடிச்சேன்.
அதுக்கப்புறம் பல படங்கள்ல சின்னச் சின்னதா கேரக்டர்ல நடிச்சுக்கிட்டிருந்தேன். அப்பத்தான் விஜய் மில்டன் சார் எனக்கு ‘கோலி சோடா 2’ படத்துல வில்லன் கேரக்டரைக் கொடுத்தார். சீமராஜாங்கிறது தான் என்னோட கேரக்டர் பெயர். அதுல சாதி சங்கத் தலைவரா நடிச்சிருந்தேன்.
படம் பார்த்தவங்க எல்லோருமே ”நல்லா நடிச்சிருக்கீங்க மாஸ்டர், உங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு”ன்னு சொன்னாங்க. அந்தளவுக்கு என்னோட கேரக்டர் ரசிகர்களிடையே பேசப்பட்டிருக்கு. அதுக்கு விஜய் மில்டன் சாருக்குத்தான் நன்றி சொல்லணும்.
தொடர்ந்து படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் ஸ்டண்ட் மாஸ்டர்ங்கிறதுனால வில்லன் கேரக்டர்கள் வந்தா ரொம்ப ஈஸி. அதே சமயம் குணச்சித்திர கேரக்டர்கள் வந்தாலும் நடிக்கத் தயாராகத்தான் இருக்கிறேன் என்ற ஸ்டண்ட் சிவாவின் இரண்டு மகன்களும் கராத்தே வீரர்கள்.
முதல் மகன் உலகளவில் 50வது இடத்தில் இருக்கிறான். இரண்டாவது மகன் 32வது இடத்தில் இருக்கிறான். அவன் தான் இந்தியாவின் நம்பர் ஒன் கராத்தே வீரன். விரைவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வான் என எதிர்ப்பார்க்கிறேன் என்றார். விரைவிலேயே தனது மூத்த மகனை மகனை வைத்து படம் ஒன்றை தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் ஸ்டண்ட் சிவா.