சிம்புவால் டி.ஆருக்கு 25 கோடி ரூபாய் கடன்!
விஜய் செய்த உதவியாலும், கடவுளின் ஆசீர்வாதத்தாலும் சிம்பு நடித்த வாலு திரைப்படம் ஆகஸ்டு 14-ஆம் தேதி ரிலீசாகும் என்றார் நடிகர் டி.ராஜேந்தர்.
இரண்டு வருடங்களாக பைனான்ஸ் உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்த இந்தப் படத்தை கடைசியில் தானே வாங்கி ரிலீஸ் செய்யப்போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார் டி.ஆர். அதற்கான ரிலீஸ் விளம்பரத்தையும் பேப்பரில் கொடுத்து வந்தார்.
இந்த சூழலில் மேஜிக் ரேஸ் என்கிற நிறுவனம் தொடர்ந்த வழக்கால் ஜூலை 17-ஆம் தேதி வருவதாக இருந்த வாலு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
தற்போது அந்த நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் வாலு திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீசாகும் என்று தெரிவித்தார் டி.ஆர்.
இதுகுறித்து இன்று நிருபர்களை சந்தித்த டி.ஆர். பேசியதாவது :
இந்தப்படம் ரிலீஸ் ஆவதற்கு தம்பி விஜய் செய்த உதவி மறக்க முடியாதது. அவர் இந்த உயரத்துக்கு வந்த பிறகும் கூட எனக்கு ரசிகராக இருக்கிறார். அவர் நடித்த வேலாயுதம் படத்தில் ட்ரெயினில் ஒரு காட்சி. அதில் எனக்கு டி.டி.ஆரை எல்லாம் தெரியாது. டி.ஆரை மட்டும் தான் தெரியும் என்று என் மீது கொண்ட அன்பினால் டயலாக் பேசினார்.
அவர் என் மீது கொண்ட அன்பினால் தான் அண்ணனுக்கு என்ன பிரச்சனை? என்று கேட்கச் சொன்னவுடன் புலி படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாரும், கோயம்புத்தூர் விநியோகஸ்தர் காஸ்மோஸ் சிவக்குமாரும் நேற்றுவரை வாலு ரிலீசுக்காக பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை.
ஒரு ஹீரோவுக்கு சிக்கல் என்று வந்துவிட்டால் இதோட ஒழிஞ்சான்யா என்று எல்லோரும் பேசுவார்கள். என் மகன் சிம்பு நடித்த வாலு படத்தையும் வெளியிடவிடாமல் பல முயற்சிகள் நடந்தன. அந்த நேரத்தில் நான் கடவுளை மட்டுமே நம்பினேன். இப்போது அவர் தான் வாலு ரிலீசுக்கு உதவி செய்திருக்கிறார் என்ற டி.ஆர் சுமார் 25 கோடி ரூபாய் கடன் வாங்கி அதன் மூலம் வாலு ரிலீசுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் அத்தனை பேருக்கும் பணம் செட்டில்மெண்ட் செய்யப்பட்டு இந்தப்படத்தை நான் ரிலீஸ் செய்கிறேன் என்றார்.