நயன்தாரா செய்தது ‘அறம்’ ஆகுமா? – தயாரிப்பாளர்கள் புலம்பல்

இந்தப் பெருமையோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டால் கூட தப்பில்லை என்று சொல்லுகிற அளவுக்கு ‘அறம்’ படம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மட்டுமில்லாமல் சிறந்த சினிமாவுக்கான அடையாளமாகவும் ஆகி விட்டது.
கோபி நயினார் இயக்கிய இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் என்பவர் கை காட்டப்பட்டாலும், உண்மையில் படத்தின் தயாரிப்பாளர் நயன்தாரா தான் என்பது தான் உறுதியாக வரும் செய்தி.
இங்கு தான் சர்ச்சை ஆரம்பித்திருக்கிறது.
பொதுவாக மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும் நயன்தாரா அந்தப் படங்களின் புரமோஷன்களுக்கு வருவதே இல்லை. அப்படி ஒரு கொள்கை முடிவில் இருந்தவர் ‘அறம்’ படத்துக்காக மட்டும் சேனல் சேனலாக ஏறி இறங்கினார்.
அதோடு விட்டாரா? ‘அறம்’ ரிலீசான அன்று தியேட்டர் தியேட்டராகச் சென்று நேரடி விசிட் செய்தார். இப்படி இந்தப் படத்துக்கு மட்டும் விழுந்து விழுந்து புரமோஷன் செய்தவர் மீது தான் செமக் கடுப்பில் இருக்கிறது தயாரிப்பாளர் சமூகம்.
சொந்தப்படம் என்றதும் புரமோஷனுக்கு ஓடோடி வரும் நயன்தாரா நாங்கள் தயாரிக்கிற படங்களின் புரமோஷன்களுக்கு மட்டும் ஏன் வருவதில்லை? என்றும் புலம்பியபடியே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள் அவரை வைத்து ஏற்கனவே படமெடுத்த தயாரிப்பாளர்கள். அதோடு இனி எங்கள் படங்களின் புரமோஷன்களுக்கும் நயன்தாரா கண்டிப்பாக வர வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கைகளை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டுமென்றும் நயனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
இனிமேலாவது அறத்தோடு நடந்து கொள்வாரா நயன்தாரா?