விஷால் போராட்டத்துக்கு ஆதரவு தர மாட்டோம்! : தியேட்டர் அதிபர்கள் கூட்டாக அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

Vishal

யாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆனவுடன் முதல் மிகப்பெரிய வேலையாக வரும் மே 30ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தமிழ்த்திரைப்படத்துறையினரின் காலவறையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தார் நடிகர் விஷால்.

பொதுவாக திரையுலகினரின் வேலை நிறுத்தப் போராட்டம் என்றால் பெப்ஸி உள்ளிட்ட அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் கலந்து பேசித்தான் முடிவை எடுப்பது வழக்கம்.

ஆனால் விஷால் அப்படி கலந்து ஆலோசிக்காமல் அவசரப்பட்டு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது தான் தமிழ்சினிமாவின் தொழிலாளர்கள் மத்தியிலேயே பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து போராட்டம் செய்வதால் நஷ்டம் திரையுலகுக்கும், அதை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் தான் வருமே தவிர அதனால் எந்த பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. அதனால் விஷால் அறிவித்த இந்த வேலை நிறுத்த முடிவை கை விட வேண்டுமென்று திரையுலகினர் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts
1 of 65

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விஷால் அறிவித்திருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் ”வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்று வருகிற செய்திகள் உண்மையல்ல என்றும், 30.5.2017 செவ்வாய்கிழமை அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், சென்னை நகர திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன், கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவருமான திருப்பூர் சுப்புரமணியம், திருச்சி தஞ்சாவூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் பிரதாப், வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.சீனிவாசன், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆர்.செல்வின்ராஜ் ஆகியோரின் கையெப்பத்துடன் இந்த கூட்டறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக அரசியலில் அசாதரணச் சூழல் இருந்து வரும் இந்த நேரத்தில் திரையுலகினரின் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்பது தான் பெரும்பான்மையான திரையுலகினரின் கருத்தாக இருக்கிறது. விஷால் என்ன நினைக்கிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.