தமிழ்ப்படம் 2 – விமர்சனம்

RATING 2.3/5

நடித்தவர்கள் – சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சேத்தன் மற்றும் பலர்

இசை – ஆர். கண்ணன்

ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்

இயக்கம் – சி.எஸ். அமுதன்

வகை – காமெடி

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 25 நிமிடங்கள்

கோலிவுட்டில் ஹிட்டான படங்களையும், மாஸ் ஹீரோக்களையும் காமெடி என்ற பெயரில் கலாய்த்து ‘தமிழ்ப்படம்’ கொடுத்த இயக்குனர் சி.எஸ். அமுதன் அதன் இரண்டாம் பாகமாக இயக்கியிருக்கும் படம் தான் இந்த ‘தமிழ்ப்படம் 2’.

முதல் பாகத்தில் முழுக்க முழுக்க சினிமாக்காரர்களை மட்டுமே கலாய்த்தவர், இந்த இரண்டாம் பாகத்தில் துணிச்சலாக அரசியல் தலைவர்களையும் கேலி செய்திருக்கிறார். ஆனால் முதல் பாகத்தில் சிரிக்கிற அளவுக்கு இருந்த காட்சிகள் இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதே உண்மை.

கதை என்ன? என்றெல்லாம் கேட்காதீர்கள். பல திரைப்படங்களில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகளை அடுத்தடுத்து கோர்வையாக வருவது போல காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இந்த மாதிரியான படங்களுக்கு திரைக்கதை எழுத மூளையை அதிகம் பயன்படுத்தத் தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் வந்த மீம்ஸ்களை சேகரித்து திரைக்கதை அமைத்தாலே போதும். அதைத்தான் செய்திருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன்.

Related Posts
1 of 53

சில நடிகர்கள் எவ்வளவு பெரிய காமெடி வசனங்களை திரையில் சொன்னாலும் அது சிரிக்கும் படியாக இருக்காது. ஆனால் இதில் சிவா அலட்டிக் கொள்ளாமல் பேசும் வசனங்கள் சிரிப்பை வரவைக்கின்றன. அதிலும் ஒரே ஒரு இட்லியை வைத்து கலவரத்தை அடக்கும் விதமெல்லாம் செம! இப்படி சிலாகிக்க ஒரு சில காட்சிகள் மட்டுமே உள்ளன.

பல இடங்களில் இது என்ன படத்தில் இடம்பெற்ற காட்சி? என்று யோசிப்பதற்குள் அந்தக் காட்சியே முடிந்து விடுகிறது. அந்தளவுக்கு காமெடியில் பெரும் வறட்சி.

கதாநாயகி லூசுப் பெண்ணாக இருக்க வேண்டும், பார்வை தெரியாதவருக்கு ரோட்டைக் கடக்க உதவ வேண்டும், மழையில் நனைந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற தமிழ்சினிவாவின் அபத்தங்களை ஹீரோயின் கேரக்டர் மூலம் கிண்டல் செய்திருக்கிறார்கள். அதற்கு சரியாகப் பொருந்திப் போகிறார் ஐஸ்வர்யா மேனன்.

‘பி’ என்ற வில்லன் கேரக்டரில் வருகிற சதீஷ் தசாவதாரம் கமலைப் போல பல கெட்டப்புகளைப் போட்டு எண்ட்ரி கொடுக்கிறார். கெட்டப்புகளில் தான் வித்தியாசம் தெரிகிறதே தவிர, மனுஷன் எப்படி சிரிப்பே வராமல் காமெடி செய்வாரோ? அந்தப் பணியை இந்தப் படத்திலும் செவ்வனே செய்திருக்கிறார்.

ஒரு காமெடி காட்சி என்பது அந்தப்படம் முடிந்த பிறகு நாம் வீட்டுக்கு வந்து அதை யோசித்து, அதில் இடம்பெற்ற வசனங்களை சொல்லிச் சிரிக்கிற அளவுக்கு இருக்க வேண்டும். அதுதான் சிறந்த காமெடி. ஆனால் அந்த மாதிரி ஞாபகத்தில் நிற்கிற காமெடிக் காட்சிகள் இப்படத்தில் நஹி!

‘ஸ்பூஃப்’ வகைக் காமெடி என்ற பெயரில் வெளியாகும் இதுபோன்ற படங்களுக்கெல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது என்றால் அந்தளவுக்கு தமிழ்சினிமாவில் காமெடியன்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

40 வயசைத் தாண்டிய நடிகை கஸ்தூரியை எல்லாம் கவர்ச்சி நடனம் ஆடவிட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஏனோ தானோவென்று வரும் காட்சிகள், சம்பந்தமில்லாத இடங்களில் பாடல்கள் என எதிலும் மெனக்கிடல் இல்லை.

மற்ற ஹீரோக்களின் படங்களை கலாய்த்து படமெடுத்திருக்கும் இயக்குனர் சி.எஸ். அமுதன் இப்படத்தையே கலாய்த்து, கிழித்து தொங்க விடுகிற அவ்வளவு ஓட்டைகளை வைத்திருக்கிறார்.

இடைவேளைக்கு அரை மணி நேரம் முன்பு வரை ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார்கள். அதற்கு பிறகு கடித்துத் கொதறி விடுகிறார்கள்.

காமெடி என்ற பெயரில் எந்தக் காட்சியை வைத்தாலும் ரசிகர்கள் சிரிப்பார்கள் என்கிற முடிவுக்கு வந்த இயக்குனர் அதற்காக கொஞ்சமாவது மெனக்கிட்டிருக்கலாம்.

தமிழ்ப்படம் 2 – போதும்டா சாமி!