டெடி – விமர்சனம்
வழக்கமான பேய்படம் என்ற வகமைக்குள் வைக்க முடியாத அளவிற்கு மருத்துவ கிரைம் கதைக்குள் ஒரு பேண்டஸி ஐடியாவை வைத்து படத்தை தேத்தி இருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தரராஜன்.
எதையும் சரியாக நினைவில் வைத்திருக்கும் ஆர்யா ஓர் மிகப்பெரிய அறிவாளி. ஒருவரின் கண் அசைவைப் பார்த்தே அவர் பொய் சொல்கிறாரா உண்மை சொல்கிறாரா என்று கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர். தனிமை விரும்பியான அவருக்குள் ஒரு நூலகமே உண்டு. அவரிடம் உயிரோடு ஒரு பொம்மை வந்து சேர்கிறது. அந்தப்பொம்மையில் இருக்கும் உயிருக்குச் சொந்தமான உடல் எங்குள்ளது என்று ஆர்யா தேடும் பயணமே டெடி படத்தின் கதை
ஆர்யா மட்டுமே படத்தை தாங்கியிருக்கிறார். வேறு எந்தக் கேரக்டர்களுக்கும் டைரக்டர் பெரிதாக வேலை கொடுக்கவில்லை. ஆர்யாவும் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். சதிஷ் அடிக்கும் பன்ச் வசனங்களுக்கு சிரிப்பும் வரவில்லை..எரிச்சலும் வரவில்லை. கருணாகரன் சற்று நேரம் வந்தாலும் சூப்பர் ஷார்ப். சாயிஷா தான் படத்தின் சோல். ஆனால் திரையில் சற்று நேரம் தான் வருகிறார். பின் எப்படி சோல்? யெஸ் கதை முழுதும் அவரே இருக்கிறார். மாசூம் சங்கர், சாக்ஷி அகர்வால் ஆகியோரும் எதோ நடித்து கரையேறிருக்கிறார்கள். வில்லனாக மகிழ்திருமேனி நல்வரவு. ஆனால் அவர் கேரக்டர் சற்று வீக்காக இருக்கிறது.
படத்தில் இமான் இன்னொரு தூணாக இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் இசை அசத்தி இருக்கிறது. ஒளிப்பதிவாளரின் பணியும் வியந்து பாராட்டக்கூடிய ஒன்று. சிற்சில இடங்களில் எடிட்டர் தன் கத்திரியை வைத்திருக்கலாம். பாடல்களில் மதன் கார்க்கியின் வரிகள் எல்லாமே சிறப்பு.
திரைக்கதையில் யாரும் கேள்வியே கேட்க கூடாது என்று முடிவெடுத்திட்டார் போல இயக்குநர். ஆமா எத்தனை கேள்வி தான் கேட்குறது? படத்தில் அத்தனை லாஜிக் கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அதையும் தாண்டி படம் ஈர்க்கிறது. சோ இந்த வீக்-என்ட்டை ஜாலியாக வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டும் என்றால் டெடி நல்ல ஆப்ஷன் தான்!
3/5