“தங்கலான்” டீசர் வெளியீட்டு விழா!
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடியோ பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வினில் கலந்துகொண்டு நடிகர் சீயான் விக்ரம் பேசியதாவது…
வரலாற்றில் நடக்கும் நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது என்று என் தந்தை என்னிடம் சொல்லியிருந்தார். எல்லா நாட்டிலும் அவர்கள் வரலாற்றைக் கொண்டாடுகிறார்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவில் அது போல் நிறைய விசயங்கள் நடந்துள்ளது ஆனால் இப்போதைய தலைமுறைக்கு அது தெரியவில்லை. டைட்டானிக் காதல் கதை என்றாலும், அதன் பின்னணி, அந்த கதை நடக்கும் இடம் கப்பல், அதன் வரலாறு அது தான் முக்கியம், அது போல் நம் வரலாற்றில் நடந்த நிகழ்வை அந்த காலகட்டத்தை அவர்கள் வாழ்க்கையைச் சொல்கிற படம் இது, இந்தப்படத்தைத் திரையில் கொண்டு வருவது அத்தனை கடினமாக இருந்தது. இந்தப்படம் செட்டுக்குள் எடுக்கவில்லை கேஜிஎஃப்பில் போய் அங்கு தங்கி எடுத்தோம், தேள் பாம்பு எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும். கல் முள்ளில் வெறும் காலில் நடந்து, அவர்கள் உடை போட்டுக்கொண்டு நடித்தேன். முதல் முறை லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன் அது இன்னும் கஷ்டம். டப்பிங்கில் நான் நிறைய மாற்றி விடுவேன், அந்நியனில் ரெமோ எல்லாம் டப்பிங்கில் மாற்றியது தான் ஆனால் இந்தப்படத்தில் அது நடக்காது. லைவ்வில் கச்சிதமாக அதே டோனில் பேச வேண்டும். கேமராவும் ஷாட் கட்டாகுது ஒரே ஷாட்டில் சுற்றி வரும், ரெஸ்ட்டே இருக்காது. ஆனால் எத்தனை கஷ்டப்பட்டாலும் மறுநாள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் நான் இது மாதிரி உணர்ந்ததே இல்லை, ரஞ்சித்திற்கு நன்றி. ரஞ்சித் சார்பட்டா படத்தை விட 100 மடங்கு உழைத்திருக்கிறார். நான் முன்னமே எந்தப்படத்திலும் இல்லாத மாதிரி இருக்க வேண்டும் என முடிவு பண்ணித்தான் இந்தப்படம் செய்தேன் ரஞ்சித் மிக அற்புதமான இயக்குநர் அதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். ஜீவி இந்தப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார். அவர் நடிக்க வந்தபோது வேண்டாம் நடிக்காதே, இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் நடித்தால் எனக்கு வாய்ப்பு வராதே என நகைச்சுவையாகச் சொன்னேன், ஜீவி நடிப்பதால் இசை நன்றாக வருமா ? என நினைத்தேன் ஆனால் நடித்துக்கொண்டே எப்படி இப்படி பிரமாதப்படுத்துகிறார் என்று தெரியவில்லை, அவர் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் பெரிய படங்களில் அசத்துகிறார். ஞானவேல் ராஜாவுடன் முன்பே படம் செய்யப் பேசினோம், இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. இது எல்லோருக்கும் மிக முக்கியமான படமாக இந்திய சினிமாவில் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி.
‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.