தற்காப்பு – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

tharkappu-review

Rating : 2/5

அதிகாரம் கையில் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக போலீசாரின் ‘என்கவுண்டர்’ எப்படியெல்லாம் அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்கத்தினராலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, உலகத்தின் பார்வையில் நியாயப்படுத்தப்படுகின்றன என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கும் படம்.

புத்தாண்டு அதுவுமாக மனித உரிமைகளைப் பற்றி துணிச்சலாகவும், தைரியமாகவும் பேசுகிற இயக்குநருக்கு முதலில் ஒரு ஸ்பெஷல் பாராட்டு!

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஹீரோ சக்திவேல் வாசு மேலதிகாரிகளின் உத்தரவுப்படி அந்த வேலையை கனகச்சிதமாகச் செய்து வருகிறார். அப்படித்தான் 18 பேரை கொலை செய்த கொடுங் குற்றவாளியான ரியாஸ்கானையும் எண்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார்.

ஆனால் அது அப்பட்டமான மனித உரிமை மீறலில் வரும் ‘போலி எண்கவுண்டர்’ என்பதை தெரிந்து கொள்ளும் அந்த அமைப்பைச் சேர்ந்த அதிகாரியான சமுத்திரக்கனி சக்திவேல் வாசு மற்றும் அவருடன் சேர்ந்து போலி என்கவுண்டரைச் செய்யும் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுகிறார்.

அதோடு நீங்கள் செய்யும் இதுபோன்ற போலி என்கவுண்டர்கள் பணபலமிக்க அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோர்களை காப்பாற்றத்தான் பயன்படுகிறது. ஆனால் கெட்டபெயர் உங்களுக்குத்தான் என்பதை எடுத்துச் சோல்ல, தான் செய்த தவறை உணர்ந்து மூன்று போலீஸ் அதிகாரிகளும் தூண்டி விட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலமாக கொடுக்கத் தயாராகிறார்கள்!

எங்கே அவர்கள் உண்மைகளைச் சொன்னால் தாங்கள் மாட்டிக்கொள்வோமோ? என்று பயப்படும் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளும் மூன்று பேரையும் அதே எண்கவுண்டரில் போட்டுத் தள்ள முயற்சிக்கிறார்கள்.

அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? நீதி வென்றதா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

Related Posts
1 of 46

2010 ஆம் ஆண்டு ரிலீசான ‘ஆட்ட நாயகன்’ படத்துக்குப் பிறகு சில படங்களில் ஹெஸ்ட் ரோலில் வந்த சக்திவேல் வாசு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சோலோ ஹீரோவாக ஜோடி இல்லாமலேயே புதிய பரிமாணம் காட்டியிருக்கிறார்.

கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும் அவருடைய கம்பீரமான நடிப்பும், துப்பாக்கியை கையில் பிடிக்கும் ஸ்டைலையும் பார்க்கும் போது முந்தைய படங்களை விட நடிப்பில் தெரிகிறது முதிர்ச்சி!

இந்த ரோல் என்றாலே அது சமுத்திரக்கனிக்கு மட்டும் தான் செட்டாகும் என்பதை நன்றாகத் தெரிந்தே மனித உரிமை கழக அதிகாரி கேரக்டருக்கு சமுத்திரக்கனியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

”அந்த கொலைகாரன் செஞ்சது கொலைன்னா எண்கவுண்டர்ங்கிற பேர்ல நீங்க செய்றதுக்கு பேரென்ன? இயற்கை தந்த அரிய கொடை மனிதனோட உயிர், அதை பறிக்கும் அதிகாரம் எந்த கொம்பாதி கொம்பனுக்கும் இல்லை . ஏன்  ஆளும் அரசுக்கே கூட அந்த அதிகாரம் இல்லை” என்கிற கருத்தை பொட்டில் அடித்தாற்போல வலியுறுத்தும் அவருடைய கேரக்டர் க்ளாப்களை அள்ளுகிறது.

என்கவுண்டர் களேபரங்களுக்கு மத்தியில் இரண்டு காதல் ஜோடிகளும் மாட்டிக்கொள்ள, எந்த குற்றமும் செய்யாமல் எத்தனை எத்தனை மனித உயிர்கள் ஒதுக்குப்புறமாக இப்படி கொன்றொழிக்கப்படுகின்றன என்பதை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ரவி.

ஜோன்ஸ் ஆனந்த்தின் ஒளிப்பதிவில் கேமரா அந்த கட்டி முடிக்கப்படாத பிரம்மாண்டக் கட்டிடத்தின் இந்து இடுக்குகளில் கூட புகுந்து திகிலைப் பரப்புகின்றன.

படம் ஆரம்பித்தவுடன் கால் மணி நேரம் கதை எதை நோக்கிப் போகிறது என்பதே பெருங்குழப்பமாக இருக்கிறது. அப்படிப்பட்ட  குழப்பமான திரைக்கதைக்கும் எப்.எஸ். பைசலின் பின்னணி இசை கை கொடுத்திருக்கிறது.

எந்த இடத்திலும் எந்த சூழலிலும் அரசியல்வாதிகள், அதிகாரமிக்கவர்கள், தொழிலதிபர்கள் இவர்கள் வைத்திருக்கும் பணம் தான் நின்று பேசும். அவர்கள் பேசும் பொய்கள் கூட அரசாங்கம் நினைத்தால் மக்கள் மத்தியில் அப்படியே உண்மையாக்கப்பட்டு நம்ப வைக்கப்படும் என்கிற நிஜத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.பி. ரவி.

தற்காப்பு – காலத்தின் கட்டாயம்!