”ரசிகர்களை நம்பித்தான் இந்தப் படத்தில் நடித்தேன்” – ‘டிக் டிக் டிக்’ விழாவில் ஜெயம் ரவி நெகிழ்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி, இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன் மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் ‘டிக் டிக் டிக்’.

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக தயாராகியிருக்கும் இப்படத்தை நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கிறார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, இவர்களுடன் ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

விழாவில் நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், ‘முதலில் நான் ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். பிறகு நல்ல படம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

அதே போல் இந்த படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் இப்படத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்க வைத்தது. அரங்கத்தின் அமைப்பே நான் உள்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பை எளிதாக்கியது. ஏனெனில் ஸ்பேஸ் த்ரில்லர் என்று சொன்னவுடன் நடிகர்களுக்கு நடிக்கும் போது தயக்கம் இருக்கும். குழப்பம் இருக்கும். கேள்வி இருக்கும். ஆனால் இந்த படத்திற்காக போடப்பட்ட அரங்கத்தில் உண்மையான விண்வெளி ஆய்வகத்திற்கான உள்ளரங்க அமைப்பு டீடெயிலாக இடம்பெற்றிருந்தது. இதற்காக கலை இயக்குநரை மனதாக பாராட்டலாம்.

Related Posts
1 of 12

இந்த படம் இரண்டு மணி நேரம் பத்து நிமிட அளவிற்கு அற்புதமாக படத்தை எடிட் செய்திருக்கிறார் எடிட்டர். இதற்காக அவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.

இந்த படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் ஒரு நாள் இயக்குநர் இது போல் ஒரு கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என கேட்டார் என்று சொன்னேன். ”ம் நடிக்கலாம்…” என்றான். அதற்கு டான்ஸ் தெரிய வேண்டும் என்றேன். கத்துக்கலாம் என்றான். அவனுடைய இந்த ஆட்டிடியுட் படக்குழுவினரை கவர்ந்தது. அதனால் அறிமுகமாகியிருக்கிறேன். அவருக்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு தந்தையாகவும், சக கலைஞராகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.

பின்னர் பேசிய இசையமைப்பாளர் டி.இமான், ‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.

இந்த நூறை ஒன்றுக்கு பின்னால் வரும் இரண்டு ஸீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஸீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றவிரும்புகிறேன்.

பொதுவாக நாங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள படங்களுக்கு பின்னணி இசை அமைக்கும் போது ஏராளமான மாற்றங்கள் இருக்கும். ஆனால் டிக் டிக் டிக் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் வருவதற்கு முன்னரே இயக்குநர் ஒவ்வொரு காட்சியின் நீளம் குறித்தும், அதில் இடம்பெறும் விசயங்கள் குறித்தும் டீடெயில் இருந்ததால் பின்னணி இசையை விரைவாக முடிக்க முடிந்தது. அதே போல் என்னுடைய இசை பயணத்தில் என்னுடைய இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.