ஈகோ மோதலால் பல கோடி நஷ்டம்! – ‘புஸ்’ ஆன தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம்
டிஜிட்டல் நிறுவனங்களின் அநியாயக் கட்டணக் கொள்ளையை எதிர்த்து மார்ச் 1 முதல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது வாரமாக தொடர்ந்த போராட்டத்தினால் தமிழக தியேட்டர்களில் புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இதனால் தினமும் குறைந்தது 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து அதிர்ச்சியடைந்த தியேட்டர் உரிமையாளர்கள் மார்ச் 16-ம் தேதி முதல் தியேட்டர்களை மூடப்போவதாக அறிவித்தனர்.
ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் தியேட்டர் வெறிச்சோடியதால் தான் தியேட்டர்களை மூடுகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டத்துக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தராமல் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் ஈகோ காரணமாக அந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல் தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தான் மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூடப்போவதாகச் சொன்னார்கள்.
ஆனால் தமிழகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கள் இருப்பதால் எல்லா சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் இன்று ஈடுபடவில்லை.
இதனால் இன்று தமிழ்நாட்டில் சென்னை, சேலம், மதுரை, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி உட்பட பல நகரங்களில் 300 மேற்பட்ட தியேட்டர்கள் மூடாமல் படங்களை திரையிட்டுள்ளார்கள்.
ஏன் இந்த குழப்பம்? என்று அவர்களிடம் பேசியபோது ”தயாரிப்பாளர்கள் படம் தராததால் தியேட்டர்களில் வசூல் இல்லை. அதை தயாரிப்பாளர்களுடன் பேசி சரி செய்ய வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு இப்பொழுது தேவையில்லாமல் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தச் சொல்கிறார்கள். தயாரிப்பாளர்கள் மீது திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கு நாங்கள் ஏன் பழிகடா ஆக வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மார்ச் 1 முதல் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்த போது ஸ்ட்ரைக் செய்தால் மக்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள் அதனால் நாங்கள் ஸ்ட்ரைக் பண்ண முடியாது என்று மறைமுகமாக டிஜிட்டல் நிறுவனங்களை ஆதரித்தவர் திருப்பூர் சுப்ரமணியம். அப்படிப்பட்டவர் இன்று சம்பந்தமே இல்லாமல் அரசை எதிர்த்து போராட்டம் என்று சொல்கிறார். அதுவுமில்லாமல் இன்று தமிழக அரசை சந்திக்காமல் நேரடியாக மாநில ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கிறார்கள். இதனால் அரசு தியேட்டர்கள் மீது கோபம் கொண்டால் பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் வரும்.
ஒருவர் தியேட்டர் நடத்துகிறார் என்றால் அவர் கண்டிப்பாக தியேட்டரில் சொந்தமாக புரொஜெக்டர் வைத்திருக்க வேண்டும் என்பது அரசு விதி. இவ்வளவு நாள் பல கோடிகள் பணத்தை பிடுங்கிய டிஜிட்டல் கம்பெனி நாங்கள் புரொஜெக்டரை தியேட்டர்களுக்கு வாடகைக்கு தான் கொடுத்துள்ளோம். அது தியேட்டர்களுக்கு சொந்தம் கிடையாது என்று சொல்கின்றனர். இதை அரசு கையில் எடுத்தால் நிலைமை என்னாகுமோ என அஞ்சுகின்றனர் அப்பாவி தியேட்டர் உரிமையாளர்கள்.
இதனால் தான் நேற்று முன் தினம் திடீரென்று ”மார்ச் 16-ம் தேதி முதல்
சென்னையில் தியேட்டர்கள் இயங்கும்” என தன்னிச்சையாக அறிவித்தார் அபிராமி இராமநாதன்.
இப்படி சில குறிப்பிட்ட தியேட்டர் உரிமையாளர்களின் சுயநல முடிவுகளால் வெறுத்துப்போன தியேட்டர் உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாததால் தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டம் ‘புஸ்’ ஆகி விட்டது.