‘பேட்ட’க்குள்ள போயாச்சு… – உச்சக்கட்ட உற்சாகத்தில் த்ரிஷா
தமிழ்சினிமாவில் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருப்பவர் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா.
விஜய், அஜித், கமல், விக்ரம், சூர்யா, சிம்பு என தமிழில் உள்ள அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்து விட்டார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை.
தன்னுடைய மார்க்கெட் குறைவதற்குள் ஒரு படத்திலாவது ரஜினிக்கு ஜோடியாக நடித்து விட வேண்டும் என்பது அவருடைய பல வருட கனவு.
த்ரிஷாவின் அந்த பலவருடக் கனவு தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ‘பேட்ட’ படத்தில் நிறைவேறியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் த்ரிஷா இணைகிறார் என்று சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தான் ரஜினியின் ‘பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக உற்சாகமாக தெரிவித்திருக்கிறார் த்ரிஷா.
வாரணாசியில் நடைபெறும் இதன் படப்பிடிப்பில், படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாகி வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதாகவும், வாரணாசியில் படமாக்கப்படும் இக்காட்சிகள் மதுரை பின்னணியில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிளாஷ்பேக் காட்சிகளில் முறுக்கு மீசை கெட்டப்பில் ரஜினி தோற்றம் தருகிறார்.