‘உத்தம வில்லன்’ ரிலீஸ் சிக்கல்! : கடைசி நேரத்தில் கை கொடுத்த ஞானவேல் ராஜா!
நேற்று ‘உத்தம வில்லன்’ படத்தைப் பார்க்க ஆவலோடு தியேட்டர்களுக்கு படையெடுத்த ரசிகர்கள் கூட்டத்துக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.
40 கோடி ரூபாய் பைனான்ஸ் பிரச்சனையில் உத்தம வில்லன் படம் ரிலீசாகவில்லை. முதலில் காலைக்காட்சி மட்டுமே ரத்து செய்யப்பட்ட படம் கடைசியில் நேற்று நாள் முழுவதும் ரிலீசாகவில்லை.
அதற்கு காரணம் கடன் கொடுத்தவர்கள் கடைசி நேரம் வரை இரக்கமே இல்லாமல் கொடுத்த பணத்தை வட்டியும், முதலுமாக எடுத்து வைத்து விட்டு மறு பேச்சு பேசுங்கள் என்று கறார் காட்டியது தான்.
இதனால் நேற்று தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள தியேட்டர்களின் கமல் ரசிகர்கள் ஆத்திரப்பட்டு தியேட்டரை தாக்கிய சம்பவங்களும் நடந்தேறியது. எப்படியும் படம் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் ரிலீசாகி விடும் என்கிற நம்பிக்கையில் நேற்று துபாயில் நடந்த பிலிம் பெஸ்டிவலுக்கு போன கமல் இரவோடு இரவாக சென்னை திரும்பினார்.
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தாணு நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, பைனான்ஸியர் மதுரை அன்பு , ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா ஆகியோர் கடன் கொடுத்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நேற்று ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தையில் இன்று காலை தான் சமரசம் ஏற்பட்டிருக்கிறது.
அதுவும் கடைசி நேரத்தில் டைரக்டர் லிங்குசாமிக்கு 35 கோடி ரூபாயை கடனாக கொடுத்து கை தூக்கி விட்டுருக்கிறார் ‘ஸ்டூடியோ க்ரீன்’ தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா.
அவரும் அவருடன் சேர்ந்து ‘ட்ரீம் பேக்டரி’ என்கிற வினியோக நிறுவனத்தை நடத்தி வரும் சக தயாரிப்பாளர்களுமான சி.வி குமார், ஒய்நாட் சஷி உட்பட தன் சக நண்பர்களும் சேர்ந்து சுமார் 30 கோடி ரூபாய் வரை பணத்தை புரட்டி தக்க நேரத்தில் உத்தம வில்லன் படம் ரிலீசாக உதவி செய்திருக்கிறார்கள்.
”ஞானவேல் ராஜா’வை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இந்தப்படம் வெளிவருவதற்கு என்னுடனே அவர் கடந்த 3 நாட்களாக இரவு பகல் பார்க்காமல் கூடவே இருந்து ஒத்துழைத்தார். அவர் இல்லாம உத்தம வில்லன் ரிலீஸ் சாத்தியமாகி இருக்காது” என்று கூறியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.
ஞானவேல் ராஜா என்கிற உத்தமர் கடைசி நேரத்தில் கை கொடுத்ததால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து இன்று நண்பகல் காட்சியிலிருந்து ‘உத்தம வில்லன்’ படம் ரிலீசாக உள்ளது.