உத்தம வில்லன் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

uttama-villain-review

‘விஸ்வரூபம்’ படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதே எதிர்பார்ப்போடு இப்படத்தை பார்க்க வர வேண்டாம். இது முற்றிலும் விஸ்வரூபத்துக்கு சம்பந்தமே இல்லாமல் உணர்ச்சிகளின் மொத்த குவியலாக வந்திருக்கும் ஒரு மகா கலைஞனின் வாழ்க்கை.

மிகப்பெரிய நடிகனான மனோரஞ்சனுக்கு (கமல்ஹாசன்) அடிக்கடி தலைவலி வருகிறது. அவருடைய ஃபேமிலி டாக்டரான அர்பணா (ஆண்ட்ரியா) ஸ்கேன் எடுத்துப் பார்க்க மூளையில் கட்டி, மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறது ஸ்கேன் ரிப்போர்ட்.

தான் இறப்பதற்குள் சினிமாவில் தன் குருநாதரான மார்கதர்சி (கே.பாலச்சந்தர்)யுடன் இணைந்து ரசிகர்கள் எல்லோரும் வயிறுவலிக்க சிரித்து மகிழ ஒரு ஃபுல் அண்ட் ஃபுல் காமெடிப்படத்தை தர ஆசைப்படுகிறார்.

முதலில் மறுக்கும் பாலச்சந்தர் கமலுக்கு வந்திருக்கும் நோயைக் கேள்விப்பட்டதும் இடிந்து போய், மனம் உருகி சம்மதம் சொல்கிறார்.

கமல் மிகப்பெரிய ஹீரோவாக இருக்கக் காரணமே அவருடைய மாமனாரும் மிகப்பெரிய தயாரிப்பாளருமான பூர்ணசந்தரராவ் தான். (கே.விஸ்வநாத்), அவரிடமும் மனைவி வரலட்சுமியிடமும் (ஊர்வசி) இந்த விஷயத்தை மறைக்கிறார்.

ஆத்திரப்படும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். குருநாதரோடு மனைவியையும் மாமனாரையும் சந்திக்கப் போகிறார் கமல்.

கமல் ஆசைப்பட்டபடி அந்த படம் வந்ததா? மனைவியை தேடிப்போன கமல் மாமனார் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்தாரா? என்பதே நெகிழ வைக்கும் காட்சியமைப்புகளோடு கண்ணீரோடு முடித்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.

கமல் மாதிரி ஒரு மாபெரும் கலைஞனை பெற்றதற்காக தமிழ்சினிமா பெருமைப்பட வேண்டும். அடடா… அடடா…. என்ன ஒரு நடிப்பு. அவருடைய விதவிதமான முகபாவனைகளுக்கு தீனிபோடவே மொத்தப்படமும் கொடுத்து வைத்திருக்கிறது. எத்தனை எத்தனை உணர்ச்சிகளின் வெளிப்பாடு! அபாரம் கமல் சார்!

ஒரு நடிகனின் வாழ்க்கை என்பது வெறும் சந்தோஷம் மட்டுமே நிறைந்ததாக ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் நிஜம் வேறு விதமாக இருக்கிறது. எத்தனை வலியும், வேதனையும் கலந்த வாழ்க்கை அது.

வீட்டுத் தோட்டத்தில் தனக்கு கேன்சர் என்று மகனிடம் கமல் சொன்னவுடன், மகன் அப்பாவை கட்டிப்பிடித்து அழுவார். அந்த வேதனை தெரியாமல் பின்னால் வீட்டு சுவற்றில் ஏறி நின்று தலைவா ‘அவார்டு நிச்சயம்’ என்று ரசிகர்கள்  கூச்சல் போடுவார்களே..? ஒரு திறமையான கலைஞனின் ரணவேதனையை அப்பட்டமாக படம்பிடித்து காட்டும் காட்சி அது.

Related Posts
1 of 2

Uttama-villain-review1

பூஜாகுமார் ஒரு நடிகையாகவும், ஆண்ட்ரியா ஒரு டாக்டராகவும் வருகிறார். பூஜாகுமாரை கம்பேர் செய்யும் போது ஆண்ட்ரியாவுக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகள் குறைவு தான். படத்துக்குள் படமாக வரும் உத்தமவில்லன் போர்ஷனில் பூஜாகுமார் அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கமலுடன் நடிக்கப் போனால் எல்லோருமே தேறிவிடுவார்கள் போலிருக்கிறது.

மார்கதர்சி என்ற இயக்குனர் கேரக்டரில் வருகிறார் மறைந்த இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர். அவரை நிஜ வாழ்க்கையில் எப்படி கமல் பார்த்திருக்கிறாரோ? அப்படியே படத்திலும் நடிக்க வைத்திருக்கிறார். ஒரு நடிகராக கே.பியை நடிக்க வைக்காமல் ஒரு குருநாதரைப் போலவே திரையில் காட்டியிருப்பது கமலின் பணிவைக் காட்டுகிறது. குரு-சிஷ்யன் இருவரும் வரும் காட்சிகள் எல்லாம் காலத்தாலும் மறக்க முடியாத பொக்கிஷம்.

வழக்கமாக எல்லா படங்களிலும் காமெடி கேரக்டர்களில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் இப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக கமலின் மேனேஜர் கேரக்டரில் வருகிறார்.கமலின் மாமனாராக வரும் கே.விஸ்வநாத், முன்னாள் காதலியின் கணவராக வரும் ஜெயராம் என எல்லோரும் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்துக்குள் வரும் படமான ‘உத்தம வில்லனி’ல் வரும் முனைவர் கு.ஞானசம்பந்தம், நாசர், சண்முகராஜன், வையாபுரி என எல்லா கேரக்டர்களையும் காமெடியாக்கி விட்டிருக்கிறார்கள்.

இப்போதைய நிஜ வாழ்க்கை, திரைப்படம் என இரண்டு விதமான காலச்சூழலுக்கு உறுத்தாத ரெண்டுவிதமான கலர் டோன்களைக் கொடுத்து கலர்புல்லான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் ஷாம்தாத்.

பெரிய பெரிய பிரம்மாண்டமான செட்டுகளை பார்க்கும் போதும் ஆர்ட் டைரக்டர்கள் லால்குடி என்.இளையராஜா, மோகன் உழைப்பை கண்கூடாக பார்க்க முடிகிறது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் காதுகளை குளிர்விக்கவில்லை என்றாலும், படத்தின் பின்னணி இசை கண்களை குளமாக்குகின்றன. ரம்மியமான காட்சிகளுக்கு பின்னணி இசையில் மெனக்கிட்டு ரசிகர்களை வசியப்படுத்தியிருக்கிறார்.

கமல் படங்கள் என்றாலே அதில் நக்கலும், நையாண்டியும் கலந்த வசனங்களுக்கு குறைவிருக்காது. அது சிந்தித்து சிரிக்க இப்படத்தில் நிறையவே இருக்கிறது.

கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒரு மாபெரும் நடிகனின் நிஜ வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்?

இந்த கேள்விக்கு ரசிகர்கள் அறிந்திராத ஒரு பக்கம் இருக்கிறது. அந்த பக்கத்தின் அத்தனை நெகிழ்ச்சியான தருணங்களை ரெண்டரை மணி நேரத்தில் பந்தி வைத்திருக்கிறார் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.