தரமணி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

taramani-review1

RATING 4/5

ரு திரைப்படம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும், அதற்குள் இன்ன இன்ன காட்சிகள் தான் அடங்கியிருக்க வேண்டும் என்று காலம் காலமாக வகுக்கப்பட்டு வந்த வணிக சினிமாக்களின் அத்தனை இலக்கணத்தையும் பெரும்  துணிவோடு மீறியிருக்கிறார் இயக்குநர் ராம்.

அந்த மீறலில் இருக்கிற யதார்த்தமும், நவீனத்தின் நடைமுறை வாழ்க்கையை காட்சிப்படுத்திய விதத்திலும் இந்த தரமணி தமிழ் சினிமாவுக்கு இன்னொரு மகுடம்!

படம் பார்க்கச் செல்கிற அத்தனை ரசிகர்களுக்கும் இதுவரை கிடைத்திராத ஒரு புதுவித ரசிப்பனுவம் கிடைத்தே தீரும். அந்த அரிதிலும் அரிதான அந்த அனுபவத்தை 18 வயது நிரம்பிய அத்தனை பேரும் அனுபவித்தே தீர வேண்டும்!

சென்னையில் ஐ.டி ஊழியர்களின் குறியீடாக இருக்கும் தரமணி பின்னணியில் நவீன யுகத்தில் யுவன், யுவதிகளின் உறவுகளைப் பற்றி படமாக்கியிருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம், விஷூவல், பின்னணி இசை இப்படி ஒரு படத்தின் அத்தனை முக்கிய விஷயங்களிலும் மெனக்கிடல், சிறு பிசிறு கூட இல்லாத ஒரு ஈரானிய சினிமாவை விட ஏன் அதையும் தாண்டி ஒரு படி மேலே இந்தப்படம் ஒரு கனமான உணர்வைத் தரும் என்பது நிச்சயம்.

ஹாட்ஸ் ஆப் இயக்குநர் ராம். தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்புகளில் அண்மைக்காலத்தில் இதுவரை யாரும் யோசிக்காத களத்தில் சொல்லத்துணியாத தளத்தில் இப்படத்தை தந்தமைக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

சமூகத்தில் அடித்தட்டு மக்களின் ஆண் – பெண் உறவுகள் குறித்து ”சொல்வதெல்லாம் உண்மை”யாக விவாதிக்கிறார்கள். ஏன் விண்ணை முட்டி நிற்கிற அபார்ட்மெண்ட்டுகளில் குடியிருப்பவர்கள் எல்லோரும் யோக்கிய புருஷர்களா? அவர்களில் அப்படிப்பட்டவர்களே இல்லையா? என்கிற கேள்வி இந்த மாதிரியான டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கிற எல்லோர் மனசுக்குள்ளும் தோன்றும்.

அந்தக் கேள்விக்கு பதிலாக ஐடி கம்பெனிகளில் கை நிறைய சம்பளம், வீக் எண்ட்டில் நண்பர்களோடு பார்ட்டி, ஆண் – பெண் லிவிங் டூ கெதர் வாழ்க்கை என மேல் தட்டு மக்களின் பகட்டு உலகத்துக்குள் நடக்கிற சம்பவங்களோடு வந்திருக்கும் படம் தான் இந்த ”தரமணி.”

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்திலும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல துறைகளில் போட்டி போடக்கூடிய சூழலிலும் பெண்களை போகப்பொருளாகப் பார்க்கிற வக்கிற எண்ணம் ஆண்களிடமிருந்து இன்னும் விலகவே இல்லை, அவளை அடிமையாகவே வைக்க விரும்புகிற ஆணாதிக்க மனோபாவமும் வீழவில்லை என்பதையும் உள்ளது உள்ளபடியான காட்சியமைப்புகளோடு கட்டமைத்திருக்கிறார்.

ஒரு அழகான மழைநாள் காட்சியோடு திரை விரிகிறது…

ஓங்கியடிக்கும் அந்த பெரு மழையில் ரிப்பேராகி விடும் டூவீலரை நிறுத்தி விட்டு மழை ஓயும் வரை ஓரமாக ஒதுங்கி நிற்கிறார் கணவனைப் பிரிந்து 7 வயது மகனோடு வசிக்கும் ஐடி ஊழியரான நாயகி ஆண்ட்ரியா. அதே இடத்தில் தான் காதலில் தோற்றுப்போன நாயகன் வசந்த் ரவியும் மழைக்காக ஒதுங்கி உட்கார்ந்திருக்கிறார்.

அந்த முதல் மழை சந்திப்பு அடுத்தடுத்த சந்திப்புகளில் காதலாக மாற, ஒரு கட்டத்தில் இருவரும் தாலி கட்டாமல் ஒரே வீட்டில் லிவீங் டூ கெதர் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள்.

வசந்த் ரவிக்கு அதீத உரிமையைக் கொடுக்கிற அந்த கணவன் என்கிற அந்தஸ்து ஆண்ட்ரியா மீதான சந்தேகத்தையும் அடுத்தடுத்த நிகழ்வுகளில்  அதிகப்படுத்துகிறது. விளைவு டார்ச்சர் தாங்க முடியாதவராய் ”வீட்டை விட்டு வெளியே போடா நாயே…” என்று வசந்த் ரவியைத் துரத்தியடிக்கிறார் ஆண்ட்ரியா.

அதன்பிறகு இருவருடைய வாழ்க்கையிலும் நடக்கிற சம்பவங்களும், அது சார்ந்த திருப்பங்களும் தான் படம்.

கதையின் மொத்த கனத்தையும் ஆண்ட்ரியா மீது இறக்கி வைத்திருக்கிறார் இயக்குநர் ராம். ஆண்ட்ரியாவும் அதை பாரமாகக் கருதாமல் ஒரு படைப்பாளியின் நேர்மையை தலையில் தூக்கி வைத்து பெருமை சேர்த்திருக்கிறார். காதல், நெருக்கம், கசப்பு, விரக்தி, வெறுப்பு, சலிப்பு, ஏமாற்றம் என அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டித்தீர்க்க ஒரு அருமையான கதாபாத்திரம். மனுஷி எந்த இடத்திலும் அந்தக் கதாபாத்திரத்திலிருந்து விலகி வெளியே செல்லாமல் காட்சிக்கு காட்சி அசரடித்திருக்கிறார்.

”நீ சிகரெட் பிடிக்காத…

ஏன் உனக்குப் புடிக்காதா…

Related Posts
1 of 5

இல்ல, உனக்கு பிடிக்கத் தெரியல…”

இப்படி கைதட்டல்களை அள்ளுகிற வசனங்களும், பொளேர் என்ற பல சமூக உண்மைகளை புட்டு புட்டு வைக்கிற விஷயங்களும் படத்தில் உண்டு.

“மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ருக்கேன். நீங்க மொட்டைன்னு நினைச்சா மொட்டை. முழங்கால்னு நினைச்சா முழங்கால். இப்போ முழங்கால்” இப்படி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நம் மனதிற்குள் எழும் கேள்விகளுக்கு தானே வாய்ஸ் ஓவரில் அவ்வப்போது விளக்கம் கொடுக்கிறார் டைரக்டர் ராம்.

படம் முடியும் போது ”ஏன் படத்துக்கு இடை இடையே ராம் வந்து வாய்ஸ் ஓவர் கொடுத்தார்?” என்கிற கேள்வியோடு நீங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ”ஃபேஸ்புக்ல நீங்க ஸ்டேட்டஸ் போடுகிற மாதிரி, நான் என்னோட படத்துல இடையில இடையில ஸ்டேட்டஸ் போட்டேன்” என்று கிளைமாக்ஸில் அதற்கும் விளக்கம் தருகிறார். அதைக் கேட்டதும் தியேட்டரில் உள்ளவர்கள் கைதட்டி, சிரித்துக் கொண்டே வெளியே நகர்கிறார்கள்.

ஆண் – பெண் உறவுகளையும், அதற்குள் எழுகிற சிக்கல்களையும் மட்டும் தானா பேசியிருக்கிறார்? இல்லை ஏரி ஆக்கிரமிப்பு, வட மாநில தொழிலாளர்களின் நியாயமில்லா இறப்பு, தமிழக மீனவர்களின் படுகொலை என சமகாலப் பிரச்சனைகளையும் பற்றிப் பேசுகிறார்.

அவ்வளவு ஏன் திருடிய 3 லட்சம் ரூபாய் பணத்தை அதை திருடியவரிடமே நாயகன் வசந்த் ரவி கொடுக்கச் செல்கிற இடத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பு நீக்கத்தால் ஏழை, நடுத்தர மக்கள் பட்ட அவஸ்தைகளையும் சொல்லி மோடியின் கார்ப்பரேட் விசுவாசத்துக்கும் அறை கொடுத்திருக்கிறார்.

இப்படி ஒரே படத்தில் பல விஷயங்களை அதிலும் படத்தின் மையக்கருவிலிருந்து சற்றும் விலகிச் செல்லாமல் படமாக்கியிருப்பது ஆகச்சிறந்த திரைக்கதையின் லட்சணம் என்றே சொல்லலாம்.

நாயகன் வசந்த் ரவி. அக்மார்க் ராம் படங்களில் வருகிற நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இது அவருக்கு முதல் படமா? என்று வியப்போடு கேட்கிற அளவுக்கு அசால்ட்டான உடல் மொழிகளால் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சில காட்சிகளே வந்தாலும் அமெரிக்க வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைக்கிற இளம் பெண்களின் அடையாளத்தை அழுத்தமாக பதிவு செய்து விட்டுப் போகிறார் அஞ்சலி.

தரமணி ரயில்நிலையத்தில் காவலராக வரும் அழகம் பெருமாள், காவல் ஆணையராக வரும் ஜேஎஸ்கே சதீஷ்குமார், அவரது மனைவி, ஆண்ட்ரியாவின் மகன் அட்ரியன் நைட் ஜெஸ்லி என வருகிற அத்தனை கதாபாத்திரத்திரங்களும் உயிரோட்டமுள்ளவை.

சென்னையின் தரமணி அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பருந்துப் பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கிறது தேனி ஈஸ்வரின் பரிசுத்தமான ஒளிப்பதிவு.

ஒலிக்க விட வேண்டிய இடத்தில் ஒலிக்க விட்டும், தேவைப்படாத இடத்தில் அமைதியை உலவ விட்டும் இதுவரை நம் காதுகள் கேட்டு உருகாத பின்னணியிலும், கதையோடும், கதாபாத்திரங்களின் மன உணர்வோடும் கலந்து வெளிப்படுத்துகிற மறைந்த மகா கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளை சிதைக்காமலும் புதுமையான இசையை வார்த்துக் கொடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

சமரங்களைச் செய்ய வேண்டிய ‘வணிக நோக்கம்’ என்கிற பேராசை சொல்லுக்குள் முடங்கிப்போன, அல்லது எடுக்கப்படாத எத்தனையோ படைப்புகள் தமிழ்சினிமாவில் இன்னும் மிச்சமிருக்கின்றன. அந்த மாதிரியான சினிமாக்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெறுவதற்கு இப்படத்தின் மூலம் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராம். இப்படிப்பட்ட துணிச்சலான படைப்புக்கு பணத்தோடு, முழு சுதந்திரமும் கொடுத்த தயாரிப்பாளருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

இப்படி பாராட்டு பத்திரம் வாசிக்க படத்தில் பல துணிச்சல் சமாச்சாரங்கள் இருந்தாலும் ஒரு பக்கமாக மட்டுமே பார்க்கிற ராமின் திரைக்கதையில் சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆணாதிக்கத்தின் அதிகாரத்தைப் பற்றி பேசுகிற ராம் பெண் உரிமைகளின் வரையறை எது? என்பதை விளக்கியிருக்கலாம். அல்லது தாலி கட்டிக் கொள்ளாமல் குடும்பம் நடத்துவது, ஆண்களுக்கு சரிசமகாக சிகரெட் பிடிப்பது, டென்ஷன் வந்தால் சரக்கடிப்பது, பார்ட்டியில் கணவனை உட்கார வைத்து விட்டு மாற்று ஆணுடன் நடனம் ஆடுவது இவைகள் தான் பெண் உரிமைகள் என்கிறாரா?

மேலும் அடிமை மனபாவத்தோடும் காலம் காலமாக பெண்களின் கற்பை ஆணாதிக்க மனோபாவத்தோடும் கேள்வியெழுப்புகிற ஆண்களுக்கு பாடம் எடுக்கிறேன் என்கிற பெயரில் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் இருக்கிற பெண்களை கேவலமாக மட்டுமே திரையில் சித்தரித்த விதத்தில் கொட்டும் வாங்க வேண்டியவர் தான்.

அதோடு சிறுவர், சிறுமிகள் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை அதிகம் புழங்கி பழக்கப்பட்டு விட்ட இந்த டிஜிட்டல் யுகத்தில் ‘யதார்த்தம்’ என்கிற ஒற்றை வார்த்தை தருகிற கட்டற்ற படைப்புச் சுதந்திரத்திலும், ”ஏ சர்ட்டிபிகேட் வாங்கியாச்சு” என்கிற துணிச்சலிலும் படத்தில் ஆங்காங்கே வலிந்து திணிக்கப்பட்ட கெட்ட வார்த்தைகளை அறவே தவிர்த்திருக்கலாம்.

இவற்றையெல்லாம் தாண்டி வணிகம் என்கிற ஒற்றைச் சொல்லுக்கும் அடங்காமல் சமரசமில்லாத மாற்று சினிமாவை முன்னெடுக்கும் ஆண்மைமிக்க ஒரு சில படைப்பாளிகளில் நம் கண் முன்னே உயர்ந்து நிற்கிறார் இயக்குநர் ராம்!