‘வாலு’ வரல…! : சிம்பு ரசிகர்கள் சோகம் ; தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்
வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக இருந்த சிம்புவின் ‘வாலு’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்த வாலு திரைப்படத்தை தனது நிக் ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். சுமார் 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தப்படம் பைனான்ஸ் சிக்கலில் தாமதமானது.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு முழுப்படப்பிடிப்பும் முடிந்து ஆடியோவும் ரிலீசான நிலையில் படத்தை சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் வருகிற 17-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த ஒரு மாதமாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து வந்தார்.
இந்நிலையில், ‘வாலு’ படத்தின் ரிலீசுக்கு தடைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். எனவே எங்கள் நிறுவனத்தை தவிர வேறு நபர் மூலமாக ‘வாலு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று மேஜிக் ரேஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இவ்வழக்கில் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி தரப்பில் இருந்து மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தன்னையும் மூன்றாவது மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் தரப்பில் கோரப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை ‘வாலு’ வழக்கு விசாரணைக்கு வந்தது. மேஜிக் ரேஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘வாலு’ படத்தை வெளியிட அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், மூன்றாவது மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தில் இந்த உத்தரவால் ‘வாலு’ படம் நாளை மறுநாள் 17-ஆம் தேதி ரிலீசாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
மேலும் ‘வாலு’ படத்தை தடை செய்யக்கோரி கூடுதலாக 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வழக்குகளின் விசாரணை நாளை வரவிருக்கிறது. இந்த நெருக்கடியால் ஜூலை 17ம் தேதி ‘வாலு’ ரிலீசாக வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.
‘வாலு’ படத்துக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத தடையால் சிம்பு ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அதே சமயம் தனுஷ் நடித்த ‘மாரி’ திரைப்படம் எந்த போட்டியும் இல்லாமல் 17-ஆம் தேதி சோலோவாக ரிலீசாகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.