இந்த நல்ல முடிவை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எடுத்திருக்கக் கூடாதா ‘கைப்புள்ள’?
சென்ற சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் அரசியல் கட்சிகள் ஆடிய ஆட்டத்தில் திமுக பக்கம் சாய்ந்து வசமாக இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்ட வடிவேலு ஆட்சி மாறியதும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போனார்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தவ வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் மீண்டும் ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அந்தப்படமும் சரி, அதற்கடுத்ததாக வந்த ‘எலி’ படமும் சரி எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.
இருந்தாலும் ஹீரோவாக ஒரு ஹிட் கொடுத்து விட்டுத்தான் மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிப்பேன் என்று முரட்டு பிடிவாதத்தில் இருந்தார். இதனால் அவரைத் தேடி வந்த வாய்ப்புகள் எல்லாமே சக காமெடியன்கள் வசம் போனது.
ஆனால் ‘எலி’ படத்தில் ஏற்பட்ட எக்கச்சக்க பஞ்சாயத்தில் யோசிக்க ஆரம்பித்தவர் தனது ஹீரோ ஆசைக்கு குட்பை சொன்னதோடு சக ஹீரோக்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிக்க மனசு மாறியிருக்கிறார்.
அவர் முடிவை மாற்றிக் கொண்டதை கேள்விப்பட்டதும் இயக்குநர் சுராஜ் விஷாலை வைத்து எடுக்கும் ‘கத்தி சண்டை’ படத்தில் வடிவேலுவை காமெடியனாக கமிட் செய்து படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்.
இதன் துவக்க விழாவுக்கு வடிவேலுவிடம் பேசிய போது ”இனி நான் ஹீரோவாகவும் நடிப்பேன், மற்ற ஹீரோக்களின் படங்களில் முழுக்க வருகிற மாதிரி காமெடி கேரக்டரிலும் நடிப்பேன். இனிமேல் இந்த இரண்டு வழிகளிலும் பயணப்பட போகிறேன்” என்றார்.
இந்த நல்ல முடிவை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எடுத்திருக்கக் கூடாதா கைப்புள்ள..?