ஒண்ணு நடிச்சுக் கொடுங்க… இல்லேன்னா பணத்தை எடுங்க… – ஷங்கரிடம் சரணடைந்த வடிவேலு
காமெடியனாக இருந்த வடிவேலுவை சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக்கிய பெருமை இயக்குநர் ஷங்கரைத் தான் சேரும்.
அதன்பிறகு தெனாலி ராமன் உட்பட சில படங்களில் ஹீரோவாக நடித்தும் அந்தப் படங்கள் கடும் தோல்வியைத் தான் சந்தித்தன.
இருந்தாலும் மீண்டும் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை ஆரம்பித்தார் இயக்குநர் ஷங்கர்.
சில மாதங்களுக்கு முன் துவங்கிய அப்படத்தின் படப்பிடிப்புக்காக சுமார் 6 கோடி செலவில் பெரியஅரங்கும் அமைக்கப்பட்டது. மேலும் வடிவேலுக்கு சம்பளத்தில் முன்பணமாக 3 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டது.
மார்க்கெட் போன நிலையிலும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வடிவேலுவுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்த போதும் கூட படப்பிடிப்பிடிக்கு வந்தோமா? நடித்தோமா என்றில்லாமல் திரைக்கதை, டெக்னீஷியன்கள் என பல விஷயங்களில் மூக்கை நுழைத்தார். வடிவேலுவின் இந்த அத்துமீறலால் இயக்குநர் சிம்பு தேவன் – வடிவேலு இடையே கருத்து வேறுபாடு உருவானது.
அதன் விளைவாக வடிவேலு படப்பிடிப்பிற்கு வருவதையே நிறுத்தினார். இதனால் படப்பிடிப்புக்கு தடங்கள் ஏற்பட்ட நிலையிலும் இயக்குநர் ஷங்கரே வடிவேலுவுடன் சமாதானம் பேசி அவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைக்க முயற்சி எடுத்தார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து பொறுக்க முடியாத ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலுவுக்கு எதிராக புகார் அளித்தார். தயாரிப்பாளர் சங்கமோ நடிகர் சங்கத்திற்கு புகாரை அனுப்பியது.
பல மாதங்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்த இந்தப் பிரச்சனை ஒருவழியாக முடிவை எட்டியுள்ளது.
ஆமாம், பஞ்சாயத்தைப் பேசிய தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு இப்படத்தில் முழுமையாக நடித்து முடித்து கொடுக்க வேண்டும். ஒருவேளை அப்படி நடிக்க விரும்பவில்லை என்றால் அவருக்காக போடப்பட்ட அரங்குங்கு ஆன செலவு மற்றும் முன்பணம் ஆகியவற்றை சேர்ந்து மொத்தம் 9 கோடி ரூபாயை ஷங்கருக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறதாம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த வடிவேலு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக ஷங்கரிடம் தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாராம்.