நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா: நடிகை தேவயானி நெகிழ்ச்சி!

Get real time updates directly on you device, subscribe now.

5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார்.வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த
‘ வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.

விழாவில் நடிகை தேவயானி பேசும் போது,

“முதலில் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் எல்லா பாடல்களையும் பார்த்தேன். சுறுசுறுப்பாக, அழகாக, நல்ல பொழுதுபோக்கு அம்சத்துடன் அமைந்திருக்கின்றன.

என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அவனை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது.

எனக்கும் அவனுக்கும் நல்ல அன்பான உறவு இருக்கிறது.
நகுல் எங்கள் வீட்டுக் குட்டிப் பையன். அவன் எனக்குச் சின்னத்தம்பி.அவன் பல திறமைகள் உள்ளவன். நானே அவனுக்கு ஒரு விசிறி தான்.பாய்ஸ் படத்திற்குப் பிறகு அவனுடைய காதலில் விழுந்தேன் படத்தைப் பார்த்த போது அவனுக்குள் ஏற்பட்டிருந்த மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. நகுல் நல்ல திறமையான நடிகன். முழுப் படத்தையும் தன் தோளில் தாங்கி சுமப்பவன். அவனுக்கு ஒரு நல்ல கதை வேண்டும். நல்ல இயக்குநர் வேண்டும்.நல்ல ஒரு கதைக்காக, நல்ல ஒரு இயக்குநருக்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான்.எல்லாருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்வார்கள். அந்த நல்ல நேரத்திற்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன்.

அவன் எனது தம்பி என்பதற்காகச் சொல்லவில்லை .அவன் நல்ல திறமைசாலி. அவன் நல்ல நடிகன் மட்டுமல்ல, நன்றாகப் பாடுவான்; நன்றாக ஆடுவான்; இசை அமைப்பான். தன்னைச் சுற்றி உள்ளவர்களை உற்சாகமாக வைத்திருப்பான்..
அப்படிப்பட்ட ஒரு தம்பியும் அக்காவும் இந்த சினிமாவில் இருப்பதே அபூர்வம் தான்.இப்படி வேறு எங்கே இருக்கிறது?

அவனுக்கு நான் முறையில் அக்கா என்றாலும் வயதில் சின்னவனாக இருப்பதால் அவனை நான் அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வேன்.அவனுக்கு நான் இன்றும் அம்மாதான்.சின்ன வயதில் இருந்து துறுதுறு என்று இருப்பான். நல்ல திறமைசாலி.

அவன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் பட விழாவில் அக்காவாக நான் கலந்து கொள்வது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. இதை என்னால் நம்ப முடியவில்லை.

இப்படி ஒரு வாய்ப்பு எத்தனைப் பேருக்குக் கிடைக்கும்? எந்த அக்காவுக்கு கிடைக்கும்?

இன்று என் அப்பாவும் அம்மாவும் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் இங்கே இருப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இங்கே நிரம்பி இருப்பதாக நினைக்கிறேன்.இங்கு நடப்பது ஒவ்வொன்றும் அவர்களைப் போய்ச் சேரும்.எப்போதும் அவனுக்கு ஆதரவாக இருந்த அவர்கள் இப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அவனைச் சூழ்ந்து இருந்த கரிய புகைமேகங்கள் விலகி விட்டன. இனி அவனுக்கு நல்ல காலம் தான். இனி நீ நல்ல நல்ல படங்கள் செய்ய வேண்டும்.நகுல் நீ எதற்கும் கவலைப்படாதே. மற்றவர்கள் அவனுக்கு ஆதரவு கொடுங்கள் “என்று கூறி வாழ்த்தினார் .