”தமிழ்ப்படங்களைப் பார்த்து தமிழ்ப்படம் எடுக்காதீர்கள்” – நாசர் அறிவுரை

Get real time updates directly on you device, subscribe now.

முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட படமாக தயாராகியிருக்கும் படம் “வெடிகுண்டு பசங்க”.

ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் வீடு புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை பெண் இயக்குநரான டாக்டர் விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார், நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். “டோரா”, “குலேபகாவலி” படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பி. சிதம்பரம் ஒளிப்பதிவாளராகவும், ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் நாசர், சதீஷ், பிருத்விராஜ், நடிகை மானு ஆகியோர் கலந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

விழாவில் நடிகர் நாசர் பேசும் போது, “வெடிகுண்டு பசங்க’ படத்தின் வரவு அவசியமான ஒன்று. மலேசிய வாழ் தமிழர்கள் எப்போதுமே, தமிழ்த் திரையுலகினருக்கு பெரும்பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குபவர்கள். இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும், சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள்.

சினிமா தான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது. அங்கிருந்து இது போல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர வேண்டும். முக்கியமாக அவையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அங்கிருக்கும் வாழ்வியலை பிரதிபலிப்பவையாகவும் இருக்க வேண்டும்.

இங்கிருக்கிற கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்து உருவாகிற தமிழ் சினிமாக்களைப் பார்த்து தயவு செய்து, படம் செய்யாதீர்கள். உங்களுடைய கலாச்சாரம், வாழ்வியல் சார்ந்த படங்களை உருவாக்குங்கள். அதைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்.

முழுக்க முழுக்க தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே, இந்திய எல்லைக்குள்ளேயே எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் எல்லாம், உலகம் முழுக்க பல மூலைகளில் திரையிடப்படும் போது, ஏன் அங்கே உருவாகிற படங்களை தமிழகத்தில் வெளியிடக் கூடாது? என்கிற கேள்வி எனக்குள் இருந்து வந்தது.

பலமுறை நான் சிங்கப்பூர், மலேசியா செல்லும் போதெல்லாம் அங்கிருக்கிற தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் விவாதிப்பேன். அதற்கெல்லாம் விடையாக இந்தப்படம் வந்திருக்கிறது.” என்றார்.