கவண் – விமர்சனம்
RATING 3.5/5
உலகத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதை சேனல்களில் பார்க்கிறோம். ஆனால் அதே சேனல்கள் பணம் சம்பாதிப்பதற்காக என்னென்ன அட்டூழியங்களைச் செய்கின்றன? என்பதை துணிச்சலோடு கார்ப்பரேட் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறார் கே.வி.ஆனந்த்! அவரே மீடியாவிலிருந்து சினிமாவுக்குள் வந்தவர் என்பது தான் கூடுதல் விசேஷம்!
மீடியா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து விட்டு ஜென் ஒன் என்ற சேனலில் வேலைக்குச் சேர்கிறார் விஜய் சேதுபதி.
பிரபல சேனலான அதில் எப்போதுமே நம்பர் 1 இடத்தை தக்க வைப்பதற்காக பல நிகழ்ச்சிகளில் தில்லு முல்லுகள் செய்வதை நேரடியாகப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதைத் தட்டிக் கேட்க முயற்சிக்கும் போது ” நீ இன்னும் வளரணும், அதுவரைக்கும் பொறுமையாக இரு” என்று காதலி சொல்லும் அட்வைஸால் கோபத்தை அடக்கிக் கொண்டு வேலை செய்கிறார்.
ஒரு சூழலில் உள்ளூர் அரசியல்வாதியான போஸ் வெங்கட் நடத்தி வரும் தொழிற்சாலை கழிவுகளால் ஒரு கிராமமே அழிந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. ஆனாலும் அந்த உண்மைகளை மறைத்து அவரிடம் பணம் பெற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பச் சொல்கிறார் சேனல் உரிமையாளர் ஆகாஷ்தீப் சாய்கல்.
இதனால் விஜய் சேதுபதிக்கும், அவருக்கும் மோதல் ஏற்பட, அந்த மோதலில் தன் நண்பர்களுடன் வெளியேறி நஷ்டத்தில் இயங்கி வரும் டி.ஆரின் முத்தமிழ் சேனலில் வேலைக்குச் சேர்கிறார்.
அந்த சிறிய சேனலை வைத்து பிரபல சேனலான ஜென் 1 சேனலின் உண்மை முகத்தை எப்படி தோலுரித்துக் காட்டிகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
அரசாங்கத்துக்கு எப்படி பொறுப்பு இருக்கிறதோ? சொல்வதெல்லாம் உண்மை தான் என்று மக்கள் நம்புகிற காட்சி ஊடகங்களுக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது என்கிற காலத்துக்கேற்ற சீரியஸான கருத்தை படமாக்கித் தந்திருக்கிறார் கே.வி.ஆனந்த். அவரின் அந்த துணிச்சலுக்கும், தைரியத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.
வழக்கமான கெட்டப்பில் இல்லாமல் இதில் மீடியாவில் வேலை செய்யும் பொறுப்பு மிக்க ஹீரோவாக வருகிறார் விஜய் சேதுபதி. கோட்டு, சூட்டு போட்டுக் கொண்டு அரசியல்வாதியான போஸ் வெங்கட்டை நேரலையில் கலாய்க்கிற போது கைத்தட்டல்களை அள்ளிக் கொள்கிறார்.
நாயகி மடோனா மாடர்ன் கேர்ள் ஆக வருகிறார். சாந்தினியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் போது விஜய் சேதுபதியிடம் காதலால் கசுந்துருகி அழுவது கூட அவரிடம் அழகு தான்.
ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் விஜய் சேதுபதி உடனான அந்த நெருக்கமான காட்சியில் கிக் ஏற்றி விட்டுப் போகிறார் சாந்தினி.
நிஜ வாழ்க்கையில் அடுக்கு மொழியில் பேசு அப்ளாஸ்களை வாங்குகிற டி.ஆர் படத்திலும் அப்படி ஒரு நிஜ வாழ்க்கை கேரக்டராகவே வருகிறார். வில்லன் தன்னை விட அதிகாரமிக்கவன் என்று தெரிந்தும் அவனை எம்.ஜி.ஆர், நம்பியார் என வகை வகையாக பிரித்து நக்கல் செய்யும் போது தியேட்டரே சிரிப்புச் சத்தத்தில் அதிர்கிறது.
‘ஜென் 1’ டிவியின் உரிமையாளராக வரும் ஆகாஷ்தீப் சாய்கல் ஆளு தான் அவ்வளவு உயரமாக இருக்கிறாரே தவிர அவருடைய பாடி லாங்குவேஜும், வசனம் பேசும் விதமும் பல விஜயகாந்த் படங்களில் பார்த்த தீவிரவாதிகளைப் போல சலிப்புத் தட்டுகிறது.
பக்கா லோக்கலான பாஸை பேசி நடித்திருக்கும் போஸ் வெங்கட் அந்தக் கேரக்டரிலும் பக்காவாக செட்டாகியிருக்கிறார். ஒரே ஒரு சீனில் வந்தாலும் ‘ஜீனியஸ்னு சொல்லிடாதீங்க. நீங்கெல்லாம் என்னை காமெடி பீஸா நினைக்கிற வரைக்கும் தான் எனக்கு மார்க்கெட்டு…’என்று சொல்லி மனசில் நின்று விட்டுப் போகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். நண்டு ஜெகனை பெண்டெடுக்காமல் அளவாகப் பயன்படுத்திய கே.வி.ஆனந்த்துக்கு கோடி நன்றிகள்!
முதல் பாதியில் இருந்த வேகமும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை என்பதே உண்மை. அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு இண்டர்வெல் விடுகிற கே.வி.ஆனந்த் இடைவேளைக்குப் பிறகு தீவிரவாதி, வெடிகுண்டு, இந்து – முஸ்லீம் பிரச்சனை என்பது மாதிரியாக ட்ராக்கை நகர்த்தியிருப்பது ரெகுலர் சினிமாவாகி போரடிக்கிறது.
அதை விட விக்ராந்த்தைக் கொல்ல போஸ் வெங்கட்டும், சேனல் உரிமையாளரான ஆகாஷ் தீ சாய்கலும் போடும் யோசனை அறுதப்பழசுத்தனம்.
பின்னணி இசையில் கூட மன்னித்து விடலாம் ரகமாக இருந்தாலும் பாடல்களில் படு சொதப்பல் செய்திருக்கிறார் ஆதி.
’கேள்வி முக்கியம்னு நெனைக்கறவன் சத்தமா கேட்பான். பதில்தான் முக்கியம்னு நெனைக்கறவன் மெதுவா கேட்பான்’ போன்ற வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகின்றன.
ஆக்சிஜன், ஹேப்பி நியூ இயர், தீராத விளையாட்டுப் பிள்ளை என பாடல்களில் அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் ஹோலி!
குப்பையாகக் கிடக்கும் டி.ஆர் டிவி சேனல் அலுவலகத்தில் ஒதுங்கிக் கிடக்கின்ற பொருட்களை வைத்தே விதவிதமாக மாற்றும் விஜய் சேதுபதி அன்கோ வின் வேலைகளில் பளிச்செனத் தெரிகிறது ஆர்ட் டைரக்டரின் டி.ஆர்.கே கிரணின் கடும் உழைப்பு.
கார்ப்பரேட் கைகளுக்குள் போய் விட்ட மீடியாக்களின் தவறுகளை அப்பட்டமாகக் காட்ட நினைத்த கே.வி.ஆனந்த்தின் துணிச்சலை கைதட்டி வரவேற்போம். அந்தக் கைதட்டல்கள் எல்லாமே முதல்பாதிக்கு மட்டும் தான். இரண்டாம் பாதியெல்லாம் ரெகுலர் சினிமாவாக மாறிப்போனதால்!
கவண் – நெத்தியடி!