வேட்டையன்- விமர்சனம்

வசூல் வேட்டையாடுவாரா இந்த வேட்டையன்?
ஜெய்பீம் என்ற படத்தை சர்வதேச லெவலில் எடுத்து உலகெங்கும் பேசச்செய்தவர் இயக்குநர் ஞானவேல். அவர் ரஜினியோடு கூட்டணி சேர்கிறார் என்றதும் சிலருக்கு பயமும், சிலருக்கு மகிழ்வும் இருந்தது. படமும் இப்படியான கலவையோடு தான் வந்துள்ளது.
கதை? என் கவுண்டர் பண்ணுவதில் மாஸ்டரான ரஜினி ஒரு நிரபராதி இளைஞனை கொன்றுவிடுகிறார். அவர் நிரபராதி என ரஜினிக்குத் தெரியவிடாமல் தடுத்தது எது? என்பதில் தான் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. கூடவே கல்வி அரசியல், நீட் எதிர்ப்பு, தனியார் நிறுவனங்கள் கொண்டு வரும் கல்வித் திட்டங்கள் ஆகியவற்றையும் படம் பேசுகிறது
ரஜினி ஆக்சன் காட்சிகள் மட்டுமல்லாமல் எமோஷ்னல் காட்சிகள் உள்பட பல காட்சிகளில் அளவோடே ஸ்கோர் செய்கிறார். ஃபகத் ஃபாசில் கேரக்டர் மிகவும் லேசான கேரக்டர் தான் என்றாலும் படத்தை ஓரளவு தாங்குவது அவரது ப்ரசன்ஸ் தான். ரித்திகா சிங் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்..அர்த்தமுள்ள கேரக்டர்களாக முகிழ்த்திருப்பது துசாரா விஜயன் கேரக்டரும், அசால் கொலார் கேரக்டரும் தான். இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். மற்றபடி வீணடிக்கப்பட்டுள்ள கேரக்டர்களில், கிஷோர், அபிராமி, அமிதாப் பச்சன், ரகுபதி டானா ஆகியோர் வருகின்றனர். குறிப்பாக டானா கேரக்டர்லாம் பழைய மெட்டிரியல்
பின்னணி இசையால் படத்தை தூக்கி நிறுத்த முயன்றுள்ளார் அனிருத். பாடல்கள் எதோ பரவாயில்லை. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு ஓரளவு ஓகே ரகம். எடிட்டர் பிலோமின் ராஜ் இன்னும் கத்திரியை கவனத்தோடு கையாண்டிருக்கலாம்
மிக நிதானமாக துவங்கும் படம் போகப்போக ஒரு இன்வெஸ்டிகேஷன் படம் போல விறுவிறு என பறக்கிறது. அட பரவாயில்லையே என நாம் நினைத்தால், முன்பாதியிலே அந்த இன்ட்ரெஸ்டிங் ஸ்கிரீன்ப்ளேவிற்கு மூடுவிழா நடத்திவிடுகிறார்கள். கொடுமை. பின்பாதியில் வேறோர் களத்தில் படம் பயணிக்கிறது. அதில் துளியும் சுவாரஸ்யமில்லை. ரசிகர்களின் மனதை வென்று வசூல் வேட்டையாட வேண்டிய வேட்டையன், சொதப்பலான திரைக்கதையால் கோட்டைத் தொடாமல் தடுமாறி நிற்கிறார்
2.5/5