எதிரிங்க உங்க கூடவே இருப்பாங்க! : அரசியல்வாதிகளுக்கு விஜய் ஆண்டனி எச்சரிக்கை!
தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு தனிப்பாதையைப் போட்டுக்கொண்டு நின்று நிதானமான அடிகளை எடுத்து வைக்கிறார் விஜய் ஆண்டனி.
‘நான்’ படத்தில் ஹீரோவாக ஆரம்பித்த அவருடைய வீச்சு ‘சைத்தான்’ வரை அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இதோ இந்த மாதம் 24-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவிருக்கிறது விஜய் ஆண்டனியின் ‘எமன்’.
சிக்ஸ்பேக், செவன் பேக் என்றெல்லாம் ரிஸ்க் எடுக்காமல் தன் உடல் வாகுக்கு என்ன பாடி லாங்குவேஜ் வருமோ அதை மட்டுமே படங்களில் கேரக்டர் வழியாக பிரதிபலிக்கிறார். ரசிகர்களும் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
தமிழ்சினிமாவின் நான்சென்ஸ் செண்டிமெண்ட்டுகளில் ஒன்றான டைட்டில் செண்டிமெண்ட்டை தனது ‘பிச்சைக்காரன்’ படத்திலேயே துணிந்து உடைத்தவர். அந்தப்படத்தை வாங்கிய அத்தனை விநியோகஸ்தர்களும் பணம் சம்பாதித்தது, செழிப்பானது இந்த உலகம் அறிந்த உண்மை.
‘எமன்’ கூட அப்படிப்பட்ட ஒரு டைட்டில் தான். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை மனுஷன்.
”ஒரு படத்துக்கு கதை தான் சார் முக்கியம், திரைக்கதையில் இருக்கிற புதுமையும், சுவாரஷ்யங்களும் ரசிகர்களுக்குப் பிடித்து விட்டால் எந்தப்படமும் ஹிட்டு தான்.” என்பது தான் அவருடைய ஹிட்லிஸ்ட்டின் சீக்ரெட்.

தேர்ந்தெடுத்து நடிக்கிற ஒவ்வொரு கதையில் ஒவ்வொரு வெரைட்டி தான். எமனும் விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களிலிருந்து வித்தியாசப்பட்டது தான் என்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். விஜய் ஆண்டனியை வைத்து ‘நான்’ படத்தை இயக்கியவர் மீண்டும் அவரோடு கூட்டணி போட்டிருக்கிறார்.
”இந்தப்படம் அரசியலைப் பின்னணியாகக் கொண்ட கதை. ஒரு சாதாரண மனுஷன் அரசியலுக்குள் நுழைந்து அந்த அதிகார இருக்கையைக் கைப்பற்ற நினைக்கிறான். அவனால் அதை சாதிக்க முடிந்ததா? இல்லையா?ங்கிறது தான் இந்தப்படம். இதுல தமிழகத்தின் தற்போதையை அரசியல் சூழல் குறித்து எந்த விஷயங்களும் இல்லை. ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் ரிலீஸ் ஆகிறதுனால ரசிகர்கள் பொருத்திப் பார்க்கலாம்” என்கிறார் டைரக்டர் ஜீவா சங்கர்.
இந்தக் கதையை ‘நான்’ படம் பண்ணும் போதே விஜய் ஆண்டனியிடம் சொல்லி விட்டாராம் ஜீவா சங்கர். ஆனால் இப்போது தான் ஹீரோவாக அறிமுகமாகிறேன். இந்த நேரத்தில் இப்படி ஒரு கனமான கதையில் நடிக்க வேண்டாம் என்று தள்ளி தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தவருக்கு இதோ இப்போது தமிழ்சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் வரிசையில் இடம் கிடைத்து விட்டதால் அதே கதையில் நடிக்க சரியான நேரம் 4 வருடங்களுக்குப் பிறகு தானாக அமைந்து வந்திருக்கிறது.
”ஜீவா சங்கரைப் பொருத்தவரைக்கும் ரத்தத்தைக் காட்டித்தான் ஆக்ஷன் படம் பண்ணனும்னு நெனைக்கிறவர் இல்லை. அதை ஸ்க்ரீன்ல காட்டாமலேயே அவரால ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தை தர முடியும், அந்தளவுக்கு திறமைசாலி. அரசியல்ல எதிரி எப்பவும் தூரத்துல இருக்க மாட்டான். அவன் பக்கத்துலேயே உங்க காலடியிலேயே தான் இருப்பான். இப்படி இந்தப் படத்துல காட்டப்படுற அரசியல் தமிழகத்துல மட்டுமல்ல, ஆப்ரிக்காவுல இருந்து அமெரிக்கா வரைக்கும் அரசியலில் இருக்கிற பொதுவானது தான். அதுதான் இந்தப்படம்” என்றார் விஜய் ஆண்டனி.
படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிகர் தியாகராஜன் நடித்திருக்கிறார்.
தமிழில் அரை டஜன் படங்களைக் கூட தாண்டாத மியா ஜார்ஜ் தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடி.
”நான் நடிச்ச படங்கள்லேயே ரூபா மஞ்சரிக்கு அப்புறம் மியா ஜார்ஜ் தான் பெரிய ஹீரோயின்” என்று தயங்காமல் மியாவுக்கு சர்ட்டிபிகே கொடுக்கிறார் அதே தனது அக்மார்க் அமைதியுடன் விஜய் ஆண்டனி.
இப்போ புரியுதா விஜய் ஆண்டனி ஏன் ஜெயிச்சுக்கிட்டே இருக்காருன்னு..?