மெர்சல் மாபெரும் வெற்றி : பி.ஜே.பியினருக்கு நன்றி தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

vijay

சும்மா விட்டிருந்தாலே ‘மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா சம்பந்தப்பட்ட வசனங்கள் பெரிதாக ரசிகர்களால் கண்டு கொள்ளப்படாமல் போயிருக்கும்.

ஆனால் என்றைக்கு அது சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழிசை உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பித்தார்களோ? அன்றிலிருந்து படத்துக்கு மவுசு கூடி விட்டது.

அதன் விளைவு தமிழகத்தில் உள்ள வைகோ உள்ளிட்ட அத்தனை அரசியல் தலைவர்களும், கமல், ரஜினி உள்ளிட்ட திரையுலக முன்னணிகளும் மெர்சல் படத்தை ரிலீசான சூட்டோடு தியேட்டருக்குச் சென்று பார்த்து அதற்கு ஆதரவாக குரலும் கொடுத்திருக்கிறார்கள்.

குறிப்பாக ராகுல் காந்தி, கபில் சிபில் என வட இந்திய அரசியல் தலைவர்களும் கருத்துச் சுதந்திரத்தை தடுக்கக் கூடாது என்று மெர்சல் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்ததும் அது வட இந்திய ஊடகங்களில் முக்கிய விவாதப் பொருளாகி விட்டது.

Related Posts
1 of 80

எந்தக் காட்சிகள் ரசிகர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் ஆழப்பதிந்து விடக் கூடாது என்று பி.ஜே.பி தலைவர்கள் நினைத்தார்களோ? அந்தக் காட்சிகளை திரும்பத் திரும்ப வட இந்திய ஊடகங்கள் ஹிந்தி சப் டைட்டில்களோடு ஒளிபரப்ப, இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்களும் கட் செய்யப்படும் என்று சொல்லப்பட்ட காட்சிகளை மட்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டு அது உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மத்தியிலும் போய் சேர்ந்து விட்டது.

இப்படி மெர்சல் படத்துக்கு எதிராக பி.ஜே.பி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது அப்படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாகியிருப்பது மட்டுமில்லாமல் உலக அளவில் நல்ல வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

யு.எஸ்.ஏ வில் முதல் முறையாக 1 மில்லியன் வசூலைக் குவித்த பெருமை மெர்சல் படத்துக்கு கிடைத்திருக்கிறது. அதேபோல மெர்சல் வெளியான பிரான்ஸ் நாட்டிலும் ஒரே ஒரு காட்சியில் 20,000 ரசிகர்கள் படம் பார்க்க வந்ததும் இதுவரை எந்தத் தமிழ்ப்படமும் செய்யாத சாதனையாக அமைந்திருக்கிறது.

இப்படி உலகம் முழுக்க மெர்சல் படத்துக்கு நல்ல வரவேற்பும், வசூலும் வரக்காரணம் பி.ஜே.பி கட்சியினர் செய்த எதிர்வினையும் ஒரு காரணம் என்று நினைக்கும் விஜய் ரசிகர்கள் ”இலவசமாக விளம்பரம் கொடுத்து எங்கள் தளபதியின் மெர்சல் படம் உலக அளவில் மாபெரும் வெற்றிப் படமாகக் காரணமாக பி.ஜே.பியினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று செம கலாய்த்தலோடு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.