கேரளாவுல அப்படி; தமிழ்நாட்ல இப்படி : வெளிச்சத்துக்கு வந்த விக்ரமின் ‘இருமுகம்’

கேரளாவில் நடந்த ஏசியாநெட் விருது விழாவுக்கு சென்றிருந்த நடிகர் விக்ரமை நெருங்கி செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார் ஒரு அப்பாவி ரசிகர்.
அவர் தான் அப்பாவியாயிற்றே..? விக்ரமின் பாதுகாவலர்களாக வந்தவர்கள் அந்த ரசிகரை விக்ரம் பக்கம் நெருங்க விடாமல் அவரை இழுத்து வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.
அந்தக் காட்சியைப் பார்த்த விக்ரமின் மனசு துடித்துப் போய் ”ப்ளீஸ் அவரை என் பக்கம் விடுங்க” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் அந்த ரசிகர் ஆசைப்பட்டபடியே செல்ஃபி எடுத்து சிரித்த முகத்தோடு அனுப்பி வைத்தார்.
யு-ட்யூப்பில் ரிலீசான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவவும் எல்லோரும் விக்ரமின் நடவடிக்கையைப் பார்த்து ”தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க…” என்கிற ரேஞ்சில் புகழந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி எல்லா இடங்களிலும் விக்ரம் இப்படி நடந்து கொள்கிறாரா..?
இதோ இன்னொரு சம்பவம்.
‘பத்து எண்றதுக்குள்ள’ என்றொரு பாடாவதி படம் வந்ததே? அந்தப் படத்தில் நடித்த போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னையிலுள்ள அசோக் நகர் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமுக்கு வருகை தந்திருந்தார் விக்ரம்.
மெயின் ரோட்டில் இருக்கின்ற கடை என்பதாலும், கடையின் முன்னாலேயே பெரிய பேனர் வைக்கப்பட்டதாலும் அங்கு ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்த பத்து பதினைந்து பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
அவர்களோ வழக்கம் போல வந்த வேலையைச் செய்யாமல் செய்யக்கூடாத வேலையை செய்ய ஆரம்பித்தார்கள். ஆமாம், ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அங்கு செய்தி சேகரிக்க வந்த நிருபர்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்கிற வேலையைச் செய்தனர்.
அதோடு விட்டால் பரவாயில்லை, முதல்மாடிக்கு செல்லும் லிப்ட்டுக்கு அருகில் இரண்டு பேரை பாதுகாப்பாக போட்டு விக்ரம் வரும்வரை அதில் யாருமே செல்லக்கூடாது என்று உத்தரவு வேறாம்.
அப்போதே அது பெரிய சர்ச்சையானது. சரி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களை விக்ரம் சந்தித்தாரா?
அதுதான் இல்லை. கடைக்கு முன்னாள் ஆர்ப்பரித்துக் கொண்டு நின்ற ரசிகர்களை திரும்பி கூட பார்க்காமல் கடையின் வாசலுக்கு கொண்டு வரப்பட்ட காரில் வேகமாக ஏறிப்போய் விட்டாராம் இந்த ‘செல்பி’ புண்ணியவான்.
கேரளாவுல அப்படி..! தமிழ்நாட்ல இப்படி..!!