‘தூசு’ தட்டப்படும் விக்ரம் படம்! : என்ன கொடுமை சரவணன்…

ஒரு டம்மி கேரக்டராக இருந்தாலும் அதற்கு கூட 10 கிலோவை குறைப்பதில் விக்ரமுக்கு நிகர் விக்ரம் தான்.
குறிப்பாக ஷங்கரின் ஐ படத்துக்காக அவர் செய்த மெனக்கிடலைப் பார்த்து இயக்குநர் ஷங்கரே அப்படத்தின் ஆடியோ பங்ஷனில் மனம் திறந்து பாராட்டினார். அந்தளவுக்கு அந்தப்படத்தில் விக்ரம் உடலை வருத்தி நடித்திருந்தார்.
படம் சுமாராகப் போனாலும் விக்ரமின் நடிப்பை யாரும் குறை சொல்லவில்லை.
அந்த சூட்டோடு சூட்டாக விஜய் மில்டன் இயக்கத்தில் அவர் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ படமும் இந்த மாதம் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது.
இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை இருப்பதால் பல மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட விக்ரமின் படம் ஒன்றை இப்போது தூசு தட்டி படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.
‘கபாலி’ படத்துக்கு முன்பாக அரிமா நம்பி படத்தின் இயக்குநர் ஆனந்த சங்கர் இயக்கத்தில் விக்ரமை ஹீரோவாக வைத்து ஒரு புதுப்படத்தை ஆரம்பித்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
அவருடன் ஐயங்கரன் நிறுவனமும் கூட்டு சேர்ந்து தயாரிப்பதாக இருந்த நிலையில் ரஜினியின் கால்ஷூட் கிடைத்ததால் அந்தப்படத்தை கிடப்பில் போட்டு விட்டார் தாணு.
இப்போது மீண்டும் விக்ரம் புதுப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் கிடப்பில் போடப்பட்ட படத்தை வருகிற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறார்களாம்.
கேரக்டருக்காக தன்னையே உருக்கிக் கொள்ளும் விக்ரமுக்கு நடந்த சோகத்தைப் பார்த்தீங்களா..?
என்ன கொடுமை சரவணன்…!