”தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நான், என் படத்தையே வெளிவர விடாமல் தடுத்தனர்” – ஆவேசமான விஷால்

Get real time updates directly on you device, subscribe now.

சென்ற வாரம் ரிலீசான ‘இரும்புத்திரை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது.

கமர்ஷியல் என்பதைத் தாண்டி படத்தில் ‘டிஜிட்டல் இந்தியா’வின் இன்னொரு அதிர்ச்சிகரமான பக்கத்தை தோலுரித்துக் காட்டியது தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

அடுத்தடுத்து சொந்தப் படங்களை எடுத்து கடனில் சிக்கித் தவித்து விஷாலுக்கு இந்தப்படம் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு பத்திரிகையாளர்களை சந்தித்தவர் இந்தப் படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் ஒரு பத்து மணி நேரம் என்னை அலைய விட்டார்கள். எப்படியாவது பட ரிலீசை தடுத்து விட வேண்டுமென்று சிலர் திட்டமிட்டு வேலை செய்தார்கள். ஆனால் அதையும் மீறி படம் ரிலீசாகியிருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “இந்தப் படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக, யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் வங்கி கடன் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை நிஜமாகவே அடித்தே விட்டேன். பொதுவாக ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகி விட்டால் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்காது என்பார்கள்.

ஆனால் இந்தப் படத்தில் சமந்தாவுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. அதன் மூலம் திருமணம் ஆகி விட்டால் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று இருந்த செண்டி மெண்ட்டை அவர் உடைத்து விட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது. அவருக்கு நன்றி.

Related Posts
1 of 66

இந்தப் படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்குத் தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட், காரை விற்று எனக்குப் பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இதுவரை எனக்கு இதுபோல் நடந்தது இல்லை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான என்னுடைய படத்தையே வெளிவர விடாமல் தடுத்து விட்டோம் பார்த்தீர்களா? என்று சிலர் வெளிஉலகுக்கு காட்ட நினைத்தார்கள். அது நடக்கவில்லை. என் படத்தையே வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால், மற்ற தயாரிப்பாளர்கள் நிலை எப்படியிருக்கும் என்பதை யோசிக்க வைத்து விட்டார்கள். அவர்களுக்கு நன்றி ஏனென்றால் இந்த சிறு வயதிலேயே எனக்கு பெரிய பெரிய அனுபவங்களைக் கொடுத்து விட்டார்கள்.

அதையெல்லாம் நான் ஒரு பொருட்டாக எடுக்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன். படத்தில் உள்ள ஆதார் கார்டு சம்பந்தப்பட்டக் காட்சிகளை நீக்கக் கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும் தியேட்டர் அருகே போராடாமல், வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது.

இந்தப்படம் வெளிவருமா? வராதா என்கிற இக்கட்டான சூழலில் என் நண்பனும், தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு தான் ஆதரவாக இருந்து படம் ரிலீசாக துணை இருந்தான். அவன் மட்டும் உதவவில்லை என்றால் கண்டிப்பாக படம் வெளிவந்திருக்காது. இந்த நேரத்தில் அவனுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.