திரைப்படமாகிறது தமிழீழ இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு!
அண்டை நாடான இலங்கையில் தமிழ் ஈழம் அமைவதற்காக அரும்பாடுபட்டு விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டமைத்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கை அரசால் மனிதாபமானம் இல்லாமல் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போர் முடிந்த பிறகும் இலங்கை அரசால் ஈழத்தமிழர்கள் பல இன்னல்களை இன்று வரை சந்தித்து வருகின்ற நிலையில் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முன் வந்துள்ளார் இயக்குநர் வெங்கடேஷ் குமார்.
இப்படத்தை வெங்கடேஷ் குமார் தனது சொந்த நிறுவனமான ‘ஸ்டூடியோ 18’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட்மேன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் பிரபாகரனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படம் பற்றிய கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் வெங்கடேஷ் குமார்.