நாடக நடிகர்கள் இல்லாமல் எங்கள் ‘பாண்டவர் அணி’ இல்லை : விஷால் திட்டவட்டம்
விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’க்கு பெருகும் ஆதரவைப் பார்த்து சரத்குமார் தலைமையிலான அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஷால் அணியினர் சார்பில் உள்ள ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இதுபோக செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகர், நடிகைகள் பிரசன்னா, ஸ்ரீமன், நந்தா, சங்கீதா, கோவைசரளா உட்பட மாவட்டத்துக்கு ஒரு நாடக நடிகரும் போட்டியிடுகின்றனர்.
நேற்று நடந்த பாண்டவர் அணியின் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது விஷால் அணியினர் மீது சரத்குமாரும், ராதாரவியும் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பொறுமையாக பதிலளித்தனர். அதோடு சரத்குமார் அணியினருக்கு எங்கள் மீது குற்றச்சாட்டு வைப்பதற்கு எந்த விஷயமும் கிடைக்கவில்லை. அதனால் தான் வெளிப்படையாக எங்கள் அணிக்கு ஆதரவு தர கமல்ஹாசனை தூண்டி விடுகிறார் என்றும், எங்களை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்றும், பைனான்சியர்களிடம் கடன் வாங்கி தேர்தலுக்கு செலவு செய்வதாகவும் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள். இதில் துளியும் உண்மையில்லை.
என்ற விஷாலிடம் நீங்கள் வெற்றி பெற்றதும் சங்கத்திலிருந்து நாடக நடிகர்கள் எல்லோரையும் நீக்கி விடுவீர்கள் என்று ராதாரவி குற்றம் சாட்டுகிறாரே? என்றார் ஒரு நிருபர்.
அதற்கு பதிலளித்த விஷால் ”இத்தனை ஆண்டு காலமும் அவர்கள் தான் சங்கத்தின் பதவிகளில் இருந்தார்கள். அவர்கள் நாடக நடிகர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
நாங்கள் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக நாடக நடிகர்களுக்கு நல்லதைச் செய்வோம். அவர்கள் பங்களிப்பு இல்லாமல் எங்கள் அணி இல்லை. நாடக நடிகர்கள் இல்லாமல் எங்கள் ‘பாண்டவர் அணி’ இல்லவே இல்லை” நாங்கள் அவர்களை நீக்கி விடுவோம் என்று ராதாரவி சொல்வதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார் விஷால்.
தொடர்ந்து அவர் பேசும் போது ”என்னை பொறுத்த வரை அனைத்து நடிகர்களும் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அனைத்து ஊருக்கும் சென்று வாக்கு சேகரிக்கும் திட்டம் எங்களிடம் உள்ளது. நாங்கள் அனைவரும் ஒரு நோக்கத்துக்காக போராடி வருகிறோம். எங்களுடைய நோக்கம் இப்போது கடைக்கோடி கன்னியாகுமரி வரை போய் சேர்ந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. அவர்கள் கூறுவதை போல் நாங்கள் யாருக்கும் சரக்கோ கோழி பிரியாணியோ வாங்கி கொடுக்கவில்லை.
நாங்கள் சங்கத்துக்காக செலவழிக்கும் பணம் அனைத்தும் எங்கள் சொந்த பணம். எங்கள் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி மிகவும் பொறுப்புள்ளவர். இப்போது கூட இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு நானும் கார்த்தியும் பொறுப்பாக கணக்கு பார்க்க வேண்டும். கார்த்தி தான் எங்கள் சங்கத்தின் கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார். மற்றவற்றை எங்கள் சங்கத்தினர் பார்த்துக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து வாக்களிக்க விரும்புபவர்கள் நீதிபதியை அணுகி அவர்களிடம் அனுமதி பெற்று நேரில் வந்து வாக்களிக்கலாம் என்றார்.
நாங்கள் தற்போது ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உறுப்பினரை பொறுப்பாளராக அறிவிக்க உள்ளோம். நாங்கள் யாரோ பைனான்சியரிடம் இருந்து பணம் பெற்று சங்க வேலைகளை செய்கிறோம் என்று ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார். அது தவறான தகவல். அந்த பைனான்சியரின் முகவரியை அவர்கள் கொடுத்தால் நாங்கள் அவரை சந்திக்க தயாராக உள்ளோம். நான் இதுவரை என்னுடைய படத்தை தயாரிக்க தான் பைனான்சியாரை நாடியுள்ளேன். இன்று சங்க கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுடைய மிக பெரிய நன்றி. இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த வரவேற்பை பெற்றது.
எஸ்.பி.ஐ. சினிமாஸ்க்கு நாங்கள் பணத்தை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம். பணத்தை திருப்பி கொடுத்து நாங்கள் உறுதியாக நடிகர் சங்க கட்டிடத்தை மீட்டு விடுவோம்.
நாங்கள் நடிகர் சங்கத்தில் படித்த நடிகர்களை வேலைக்கு அமர்த்த உள்ளோம். நாங்கள் தயாரிக்கும் படத்தை நாங்களே மிகப்பெரிய அளவில் தயாரிக்கும் முடிவில் உள்ளோம்” என்றார்.
இதற்கிடையே நடிகர் நாசர் மேடை ஏறி பேசினார், நடிகர் சரத் குமார் நாங்கள் கமல்ஹாசன் பேச்சைக் கேட்டு இதை செய்கிறோம் என்று ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு இங்கே அறிவில் குறைந்தவர்கள் யாரும் இல்லை. எங்களுக்கு சுயமாக சிந்திக்க தெரியும். கண்டிப்பாக இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெருவோம் என்றார்.