விஐபி 2 வில் ஏன் அனிருத் இல்லை? : மனம் திறந்தார் தனுஷ்

”வேலையில்லா பட்டதாரி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ”விஐபி 2” படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார்.
முக்கிய கேரக்டரில் பிரபல ஹிந்தி நடிகை கஜோல் நடித்திருக்கும் இப்படத்தில் முதல் பாகத்துக்கு இசையமைத்த அனிருத் பங்குபெற வில்லை. அவருக்குப் பதிலாக பவர் பாண்டி படத்தில் தனுஷுடன் கூட்டணி போட்ட ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
அனிருத் இல்லாதது குறித்து தனுஷின் ரசிகர்களே கேள்வியெழுப்பிய நிலையில் அனிருத்தை ஏன் விஐபி2 படத்தில் கழற்றி விட்டேன் என்பதற்கான காரணத்தை மனம் திறந்து சொன்னார் தனுஷ்.
சமீபத்தில் இப்படக்குழுவினர் நிருபர்களை சந்தித்தார்கள் அதில் தனுஷ் பேசியதாவது : ‘விஐபி 2’ படம் ஆணாதிக்க படம் இல்லை. முதல் பாகத்தை போன்றே இந்த பாகமும் இளைஞர்களை வெகுவாக கவரும் விதமாகவும், அனைவரும் ரசிக்கும்படியாகவும் அமைந்துள்ளது.
முதல் பாகத்தில் தாயை இழந்த மகன் சாதிக்க முயற்சிப்பதை காட்டியிருந்தோம். இரண்டாம் பாகத்தில் வேலையை இழந்து திருமணமான இளைஞன் படும் கஷ்டம் உள்ளிட்டவற்றை காட்டுகிறோம். விஐபி 2 படத்தின் அச்சாணி கஜோல் தான். அந்த கதாபாத்திரத்தை அவரை தவிர வேறு எந்த நடிகையாலும் நடித்திருக்க முடியாது. ‘விஐபி 3’ படமும் வரும். அதிலும் கஜோல் நடிப்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு இளைஞனின் துடிப்பையும், உறுதியையும் வெளிப்படுத்தும் விதமான ஹீரோ என்பதால் ‘விஐபி’ படத்தில் அனிருத்தை இசையமைப்பாளராக கமிட் செய்தோம். ஆனால் இரண்டாம் பாகத்தில் பொறுமை மற்றும் வாழ்க்கை தத்துவம் உணர்ந்த இசையமைப்பாளர் தேவைப்பட்டதால் ஷான் ரோல்டனை தொடர்பு கொண்டோம்.” என்றார் தனுஷ்.