யார் இவன் – விமர்சனம்
RATING : 2/5
நட்சத்திரங்கள் : சச்சின் ஜோஷி, ஈஷா குப்தா, கிஷோட், பிரபு, சதீஷ், தன்யா பாலகிருஷ்ணா, டெல்லி கணேஷ், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர்.
இயக்கம் : டி.சத்யா
இசை : எஸ்.தமன்
வகை : த்ரில்லர்
சென்சார் சர்ட்டிபிகேட் : U/A
நேரம் : 2 மணி நேரம் 5 நிமிடங்கள்
கோடீஸ்வரர் பிரபுவின் மகளான நாயகி ஈஷா குப்தாவை காதலித்து திருமணம் செய்கிறார் கபடி வீரரான நாயகன் சச்சின். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்காக கோவாவுக்குச் செல்பவர் அங்கு ஆசை மனைவியை நடுக்கடலில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுகிறார்.
இறந்து போன நாயகியின் உடலை எங்கு தேடியும் கிடைக்காத போலீஸ் சச்சினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது. பின்னர் கொலைக்கான காரணத்தை துப்பறிய வருகிறார் விசாரணை அதிகாரியான கிஷோர்.
விசாரணையில் ஈஷா குப்தாவைப் போலவே உருவத்தில் இருக்கும் இன்னொரு பெண்ணான கேத்ரீனாவையும் சச்சின் கொலை செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. அதே நேரத்தில் இந்த இரண்டு கொலைகளையும் சச்சின் செய்திருக்கவே மாட்டார் என்று அவனது பயமே இல்லாத, தெனாவெட்டான நடவடிக்கைகள் மூலமாக நம்புகிறார் கிஷோர்.
அப்படியானால் நடந்த இரண்டு கொலைகளுக்கும் காரணமானவர்கள் யார்? சச்சின் உண்மையிலேயே கொலை செய்யவில்லை என்றால் அவர் ஏன் உண்மையை வெளியில் சொல்ல தயக்கம் காட்ட வேண்டும்? போன்ற ட்விஸ்ட்டுகளுக்கு பதிலாக அமைவது தான் கிளைமாக்ஸ்.
பொதுவாக தமிழில் அறிமுகமாகும் ஹீரோக்கள் ஒரு அழகான காதல் கதையைத்தான் தேர்தெடுத்து நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தின் நாயகன் சச்சின் காதலோடு சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் கலந்த கதையாகவும் பார்த்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
ஆள் பார்ப்பதற்கு சற்று உயரம் குறைவாகத் தெரிந்தாலும், கட்டுமஸ்த்தான உடற்கட்டமைப்பில் கபடி வீரராகவும், ஆக்ஷன் காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார்.
நாயகியாக வரும் ஈஷா குப்தாவை பாடல் காட்சிகளில் மட்டும் தான் ரசிக்க முடிகிறது. மற்ற காட்சிகளில் நடிப்பிலும், லிப் மூவ்மெண்ட்டிலும் அப்படி ஒரு செயற்கைத்தனம். பேசாமல் அவருக்குப் பதிலாக அவருடைய தோழியாக வரும் தன்யா பாலகிருஷ்ணனை நாயகியாக்கியிருந்தால் இன்னும் டீப்பாக ரசித்திருக்கலாம்.
காமெடிக்கு சதீஷை நம்பியிருக்கிறார் இயக்குநர். அவரும் வழக்கம் போலவே சிரிக்க வைக்க என்னென்னவோ செய்து தான் பார்க்கிறார். ம்ஹூம் நமக்குத்தான் சிரிப்பு வருவேனா..? என்கிறது.
திருப்புமுனை கேரக்டரில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரபு. விசாரணை அதிகாரியாக வரும் கிஷோரும் அந்தக் கேரக்டரில் கன கச்சிதம்.
தமனின் இசையில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அப்படியே தெலுங்கு படங்களின் வாடை. கோவாவின் எழில் கொஞ்சும் இயற்கை அழகு மற்றும் அந்த பிரம்மாண்டமான சிறைச்சாலையின் உள்கட்டமைப்பு காட்சிகளில் பிரம்மிக்க வைக்கிறது பினேந்த்ரா மேனனின் ஒளிப்பதிவு.
நாயகியைக் கொன்றது யாராக இருக்கும்? என்று முதல் காட்சியிலேயே சஸ்பென்ஸை வைக்கும் இயக்குநர் சத்யா அதை கிளைமாக்ஸ் வரை நீட்டித்திருப்பது சுவாரஷ்யமான த்ரில்லர் பட ரகம். இருந்தாலும் தமிழ், தெலுங்கு என இருமொழிப்படம் என்பதாலும், படத்தில் வருகிற பெரும்பாலான முகங்கள் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும் ஒரு தெலுங்கு டப்பிங் படத்தைப் பார்த்த உணர்வைத் தருகிறது.