ஒருநாள் இரவில் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

oru-naal

Rating : 4.3/5

2012ல் ‘ஷட்டர்’ என்ற பெயரோடு மலையாளத் திரையுலகை கலக்கிய திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த ‘ஒருநாள் இரவில்’!

ரீமேக் என்றாலே காட்சிகளை அப்படியே எடுத்து அப்படியோ வைப்பது தானே? அதில் என்ன சுவாரஷ்யங்கள் இருந்து விடப் போகிறது என்று ரசிகர்கள் நினைக்கலாம்!அந்த நினைப்பை தவிடு பொடியாக்கி காட்சிக்கு காட்சி திருப்பங்களை தந்து படத்தை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஆண்டனி.

சகல வசதி வாய்ப்புகளுடன் இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். அவருக்கு காலேஜ் படிக்கும் மகள் கூட படிக்கும் சக மாணவனோடு நெருங்கிப் பழகுவது பிடிக்காமல் போகிறது. அதைக் காதல் என்று நினைத்துக் கொண்டு சொந்தத்திலேயே மகளுக்கு அவசரம் அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.

இதனால் குடும்பத்தில் மனைவிக்கும், மகளுக்கும் இடையே ஏற்படும் வாய்த் தகறாரு மனைவியை கை நீட்டி அடிக்கும் அளவுக்கு போய் விடுகிறது.

கட்டிய மனைவியும், பெற்ற மகளும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்கிற வெறுப்பில் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டுக்கு அருகில் இருக்கும் தனக்கு சொந்தமான கடையில் மது அருந்துகிறார் சத்யராஜ்.

மதுவைக் குடித்ததும் மனம் மாதுவைத் தேட, ஆட்டோ டிரைவராக வரும் வருணைக் கூட்டிக்கொண்டு அப்படியே ஹாயாகக் கிளம்புகிறார். அப்போது தான் அவர்கள் தாண்டி வரும் பஸ் ஸ்டாண்டில் கண்களாலேயே வசியம் செய்யும் விலைமாது அனுமோலைப் பார்க்கிறார்.

பார்த்த மாத்திரத்தில் சத்யராஜின் மனம் சஞ்சலப்பட, வருணின் துணையோடு அவரைக் கூட்டிக்கொண்டு ஒதுங்க இடம் தேடுகிறார்.

போகிற இடங்களெல்லாம் திகில் படங்கள் போல அவருக்குள் பயத்தை உண்டு பண்ண, எதற்கு பிரச்சனை என்று வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் தனது காலி கடைக்குள் ஷட்டரை பூட்டிக்கொண்டு அனுமோலோடு செட்டிலாகி விடுகிறார்.

வெளியில் கதவை பூட்டி விட்டு, வந்த அனுமோலுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் வாங்கப் போகும் வருணுக்கு இரவு முழுவதும் வர முடியாத இக்கட்டான சூழல் சுழற்றியடிக்க, சத்யராஜின் மனது ‘தடக்’ ‘தடக்’கிறது.

இதற்குள் எட்டிப் பார்க்கும் தூரத்திலேயே இருக்கும் சத்யராஜின் குடும்பம் சொந்தங்களுடன் சேர்ந்து அங்கும் இங்கும் தேட ஆரம்பிக்கிறார்கள்.

இது போதுதா..?

மொத்த தியேட்டரும் வாய் இடுக்கில் விரல் நகத்தை கடிக்கக் கொடுத்துக் கொண்டு அடுத்து என்ன? அடுத்து என்ன? என கிளைமாக்ஸுக்காக காத்திருக்கிறது.

‘ஏ பிலிம் பை ஆண்டனி’ என எண்டு டைட்டில் கார்டு வரவும் மொத்த தியேட்டரும் பலத்த கைதட்டல்களை அள்ளிக்கொடுத்து நல்ல படம் பார்த்த திருப்தியோடு வெளியேறுகிறது.

ஏற்கனவே வேறுமொழியில் ரிலீசான ஒரு படத்தின் கதையில் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய முடியாது. ஆனால் சூழலுக்கேற்ப திரைக்கதையில் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கான சுவாரஷ்யங்களை சேர்த்திருக்கிறார் எடிட்டர் ஆண்டனி.

ஒரு கேரக்டருக்கு எப்படி பொருத்திப் பார்க்க நினைக்கிறோமோ? அப்படியே தன்னை வடிவமைத்துக் கொள்வார் சத்யராஜ். அந்த ஆச்சரியத்தை இந்தப்படத்தில் மிக அழகாக வெளிக்காட்டியிருக்கிறார்.

ஆசைக்கு அனுமோலை கூட்டி வந்து விட்டு அவரை தொடத் தயங்குவதும், அடிக்கடி ஜன்னல் வழியே தன் வீட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்து பரிதவிப்பதும், தான் உள்ளே இருப்பது தெரியாமலேயே ஷட்டருக்கு வெளியே உட்கார்ந்திருக்கும் தனது நண்பர்கள் தன்னைப் பற்றி எப்படிப்பட்ட அபிப்ராயத்தை வைத்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டு பொங்குவதுமாக அத்தனை காட்சிகளையும் நடிப்பால் அசரடிக்கிறார்.

சத்யராஜுக்கு மாற்றாக யாரை நடிக்க வைக்கலாம் என்று நமது எண்ண ஓட்டத்தை ஒருமுறை சுழல விட்டால் மீண்டும் சத்யராஜே தான் நம்கண் முன்னால் நிற்பார். அந்தளவுக்கு பெர்பெக்‌ஷன்!

விலைமாதுவாக வரும் அனுமோலை திரையில் பார்த்த முதல் காட்சியிலேயே கேரக்டருக்கு கச்சதமான ஆள் தான் என்கிற முடிவுக்கு யோசிக்காமல் வந்து விடலாம். மெதுவாக நகரும் ஆட்டோவில் சத்யராஜைப் பார்த்து கண்களை சுழற்றி பார்க்கிற காட்சியில் சத்யராஜ் மட்டுமல்ல, ரசிகர்களே விழுந்து விடுகிறார்கள்.

அதன்பிறகு அவருடன் விடிய விடிய பூட்டிய கடைக்குள் இருந்து கொண்டு அவர் செய்யும் சின்னச் சின்ன பாவனைகளில் கூட ஒரு விலைமாதுவின் கேரக்டரை அப்பட்டமாக பிரதிபலிக்கிறார்.

வித்யாபாலன் என்கிற திறமையான நடிகையை தவறவிட்ட தமிழ்சினிமா இப்படத்தின் நாயகி அனுமோலையாவது தொடர்ந்து அங்கீகரித்து பெருமை சேர்த்துக் கொள்ளட்டும்!

தனது புதுப்படத்துக்கான திரைக்கதையை ஆட்டோவில் தவறவிட்டு விட்டு அதைத் தேடி அலைகிறார் யூகிசேது.

எந்த அளப்பறையும் இல்லாத அமைதியானவராக வரும் அவருடைய கேரக்டர் உதவி இயக்குநர்களின் மொத்த வலிகளையும் இஞ்ச் பிசகாமல் காட்டியிருக்கிறது. ”சார் நீங்க படம் பண்ணப் போறீங்கள்ல…” என்று ஒருவர் கேட்கும் போது ”ஆமாய்யா பல வருஷமா நானும் அதை சொல்லிக்கிட்டுத் தான் இருக்கேன் என்பாரே..”. அது பல உதவி இயக்குநர்களில் நிஜ வலி.

”பிள்ளைங்களுக்கு நாம சொத்து சொகம் எல்லாம் சேர்த்து வைக்க வேணாம். நல்ல படிப்பைப் கொடுத்தாப் போதும்” என்பது மாதிரியான அவர் எழுதியிருக்கும் வசனங்களும் ‘நச்’. அவருடைய கேரக்டரையும், அனுமோலின் கேரக்டரையும் கிளைமாக்ஸில் ஒரு நூழிலையில் இணைக்கும் திரைக்கதையின் போக்கு அபாரம்!

ஆட்டோ டிரைவாக அறிமுகமாகியிருக்கும் ஐசரிவேலனின் மகனுக்கு இது முதல் படம் தான். ‘கீச்’ ‘கீச்’ என்ற பேச்சுக்குரலில் லேசாக பட்டி, டிக்கி, டிங்கரிங் பார்த்து விட்டால் அடுத்தடுத்த படங்களில் தேறிவிடுவார்!

மூடிய ஷட்டரை தட்டும் சத்தம் கேட்கும் போதெல்லாம் யாருப்பா அதை தெறக்கப் போறது என்கிற எதிர்பார்ப்பும், பயமும், பரிதவிப்பும் சத்யராஜை மட்டுமல்ல, படம் பார்க்கும் ரசிகனின் இதயத் துடிப்பையும் எக்கச்சக்கமாக எகிறியடிக்கிறது.  அந்தளவுக்கு ஆண்டனியின் திரைக்கதை செம ஷார்ப்! இந்த நேர்த்திக்காகவே ஆண்டனிக்கு ஆளுயரை மாலை போட்டு வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.

ஒருநாள் இரவை எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு மேலும் திக் திக் இரவாக்குகிறது. நவீனின் இசையில் பாடல் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் காட்சிகளோடு ஒன்றிப்போக வைக்கிறது.

மகளை சந்தேகப்படும் அப்பாவை மகளே திருத்துகிற அந்தக் கிளைமாக்ஸ் காட்சியில் மொத்த ரசிகர்களின் கை தட்டல்களையும் சில நிமிடங்கள் வரை அள்ளுகிறது.

நேரடிப் படங்களிலேயே ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருக்கும் போது ரீமேக் படமான இதில் சின்னச் சின்ன லாஜிக் மீறல்கள் மட்டுமே உள்ளன. அதையெல்லாம் தூரத் தூக்கிப் போட்டு விடுங்கள்.

‘காட்சிக்கு காட்சி யதார்த்தம்’ என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தத்தை இந்தப் படத்தில் முழுமையாக அனுபவித்து விட்டு வரலாம்!