சதுர அடி 3500 – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

sathurai-adi-3500-review

RATING : 2/5

ரியல் எஸ்டேட் பின்னணியில் ஹாரர் கலந்த த்ரில்லராக வந்திருக்கும் படம் தான் இந்த ‘சதுர அடி 3500’.

கட்டி முடிக்கப்படாத ஒரு பெரிய கட்டிடத்தில் தூக்கில் தொங்கியபடி கிடக்கிறார் அதன் உரிமையாளர் ஆகாஷ். அந்தக் கொலையை விசாரிக்கும் அதிகாரியாக வருகிறார் ரஹ்மான். ஒரு கட்டத்தில் அதை தொடர்ந்து விசாரிக்கும் பொறுப்பு ஹீரோவான போலீஸ் அதிகாரி நிகில் வசம் வருகிறது.

கொலையாளியை பின் தொடர்கிற வேலையில் இறங்குகிற நிகிலுக்கு பார்க்கிற இடங்களில் எல்லாம் இறந்து போன கட்டிட உரிமையாளர் ஆகாஷ் தான் கண்களுக்குத் தெரிகிறார். அவர் அருகில் போனால் மறைந்து விடுகிறார்.

அதோடு இன்னும் சிலர் கண்களுக்கும் அவர் அப்படியே தெரிகிறார். இதனால் உண்மையிலேயே அவர் பேய் தானா? அல்லது உயிரோடு இருக்கிறாரா? என்கிற குழப்பத்துக்கு பதிலாக அமைவது தான் படத்தின் மிச்சம் மீதி. இடையில் இனியாவுடன் ஆகாஷூக்கு அறுதப்பழசான லவ் போர்ஷனும் உண்டு.

டைட்டிலைப் பார்த்ததும் ரியல் எஸ்டேட் துறையில் நடக்கிற திரை மறைவு சமாச்சாரங்களை புட்டு புட்டு வைத்து மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை கொடுத்திருப்பார் டைரக்டர் என்கிற எதிர்பார்ப்பு தான் எழும். ஆனால் படத்தில் உட்கார்ந்தால் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பேய், பிசாசு, ஆவி என திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குநர் ஜாய்சன்.

Related Posts
1 of 2

போஸ்டர்களில் ரஹ்மான் புகைப்படங்களைப் போட்டு விளம்பரப்படுத்தினாலும் படத்தில் ஹீரோ என்னவோ விசாரணை அதிகாரியாக வரும் நிகில் தான். போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு ஏற்ற கட்டுக் கோப்பான பாடியோடு வந்தாலும் குளோசப் காட்சிகளில் நடிக்க ரொம்பவே தடுமாறுகிறார். குறிப்பாக லாக்கப்புக்குள் ஒரு குற்றவாளியை அடிக்கிற காட்சிகளில் அவர் காட்டுகிற சீரியஸ்தனம் நமக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

அவருடைய காதலியாக வரும் ஸ்வாதி தீக்‌ஷித் கவர்ந்திழுக்கும் கண்களோடு கொழுக் மொழுக் பெண்ணாக பார்ப்பதற்கு கொள்ளை அழகு. கொஞ்சியும் பேசுகிறார், கோபமும் படுகிறார். டூயட் பாடுகிறார் அவ்வளவு தான் அவருடைய ஏரியா.

ப்ளாஷ்பேக் காட்சிகளில் ஆகாஷின் காதலியாகவும், சில காட்சிகளில் எக்ஸ்ட்ராவாக மேக்கப்பை போட்டுக்கொண்டு பேயாகவும் வந்து பயமுறுத்த முயற்சிக்கிறார் இனியா. கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணி செய்யும் காமெடியில் கொஞ்சம் சிரிக்க முடிகிறது.

ஆவியாக வந்து மிரட்டும் ஆகாஷ், மனோபாலா, தலைவாசல் விஜய், சரவணன் சுப்பையா என தெரிந்த முகங்கள் அரை டஜன் இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்கள் அரை அடி கூட இல்லை. கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் குத்தாட்ட ரகம்.

தன் காதலியை திருமணம் செய்ய வருகிற அத்தனை பேரையும் பயமுறுத்துகிற ஆகாஷ் பின்பு அவரே நீ இன்னொருவனை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தியனுப்புவது எந்த மாதிரியான திரைக்கதை ட்விஸ்ட் என்பது டைரக்டரின் சிந்தனைத் திறனுக்கே வெளிச்சம்.இப்படி எடுத்துச் சொல்ல சொச்சம் ஓட்டைகளும், மன்னித்து விட சில காட்சிகளும் படத்தில் உண்டு.

போஸ்டர் டிசைன்களை வடிவமைப்பதில் காட்டுகிற அக்கறையை கொஞ்சமாவது திரைக்கதையில் காட்டினால் 153 ரூபாய் 60 காசு கொடுத்து படம் பார்க்கிற ரசிகர்கள் அட்லிஸ்ட் திட்டாமலாவது செல்வார்கள்.