விற்றது 45 லட்சம்; வந்தது 30 கோடி! : விஜய், அஜித் வசூலை முந்திய விஜய் ஆண்டனி!
”ஆசைகள் இல்லாத மனிதர்களே இல்லை”, ”அத்தனைக்கும் ஆசைப்படு” என்கிறார் ஒரு ஹைடெக் சாமியார்.
காத்திருந்து நல்ல விலைக்கு படத்தை கொடுத்திருந்தால் சில கோடிகளை அள்ளியிருக்கலாம். ஆனால் வெறும் 45 லட்சம் ரூபாய்க்கு தனது ”பிச்சைக்காரன்” படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையைக் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அப்படி மலிவான விலையில் விற்பனையான ”பிச்சைக்காரன்” படம் வசூலித்ததோ பல கோடிகளை என்கிற தகவல் தான் இன்றைய ”சைத்தான்” ஆடியோ பங்ஷனில் வந்திருந்த அத்தனை பேர்களையும் ஆச்சரியப்பட வைத்தது.
கமிட் செய்து தயாரித்து நடிக்கின்ற அத்தனை படங்களும் கமர்ஷியலாக ஹிட்டடித்தாலும் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான கதையம்சத்தோடு தான் கமிட் செய்கிறார் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் வெற்றியைத் தொடர்ந்து இந்த மாதம் ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது விஜய் ஆண்டனியின் சைத்தான்.
விஜய் ஆண்டனி ஜோடியாக அருந்ததி நாயர் நடிக்க புதுமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.
இன்று நடந்த இப்படத்தின் ஆடியோ பங்ஷனில் தான் தான் விழா நாயகன் என்றாலும் அந்த இடத்தை படத்தின் இயக்குநருக்கு பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தார் விஜய் ஆண்டனி.
”இன்றைய விழாவோட நாயகன் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அவர் மிகப்பெரிய திறமைசாலி. மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் ஒரு படத்துக்காக காத்துக்கிட்டு இருக்கலாம். ஆனால் இந்தப்படத்துல எனக்காக எல்லாரும் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா வேலை செஞ்சாங்க. அந்தப் பொறுமைக்கு நன்றி” என்று அளவோடு பேசினார்.
விழாவில் பேசிய ஃபிலிம் சேம்பர் செயலாளர் காட்ர கட்ட பிரசாத் ”விஜய் ஆண்டனியோட பிச்சைக்காரன் படத்தை தெலுங்குல 45 லட்சம் ரூபாய்க்குத்தான் டப்பிங் ரைட்ஸ் கொடுத்தார். ஆனால் அந்தப்படம் பெரிய அளவுல ஹிட்டாகி 30 கோடி ரூபாயை வசூல் செஞ்சது. 45 லட்சம் எங்கயிருக்கு? 30 கோடி எங்கேயிருக்குன்னு நீங்களே யோசிங்க. இதுக்கு முன்னாடி ரஜினி, கமல் படங்கள் மட்டும் தான் இந்தளவுக்கு வசூல் பண்ணியிருக்கு. அதுக்கப்புறம் விஜய் ஆண்டனியோட பிச்சைக்காரன் தான் வசூல் பண்ணியிருக்கு.
எப்படி அந்தப் படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருந்துச்சோ அதைவிட பிரம்மாண்டமான வரவேற்பு இந்த சைத்தான் படத்துக்கும் இருக்கும்” என்றார்.