10 எண்றதுக்குள்ள – விமர்சனம்

Rating : 1.9/5
ஒரு படம் ஹிட் ஆயிடக்கூடாது. உடனே அந்த டைரக்டரை கூப்பிட்டு அடுத்த பட வாய்ப்பை கொடுத்துடணும். இந்த எண்ணம் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் வருவது இயற்கையானது தான். ஆனால் ஒரு இயக்குநராகி பின்பு தயாரிப்பாளரான ஏ.ஆர்.முருகதாஸும் அந்த பேராசையில் ஐக்கியமாகியிருப்பது தான் வேதனையிலும் வேதனை.
‘கோலி சோடா’ என்கிற மினிமம் பட்ஜெட் படத்தை எடுத்து இதுதான்யா கோயம்பேடு மார்க்கெட்டோட அழகு என தமிழ்சினிமா ரசிகர்களுக்கு புது ரசனையை கொடுத்தவர் இயக்குநர் விஜய் மில்டன்.
இத்துணூண்டு பொடிப்பசங்களை வைத்துக் கொண்டு அவர் இயக்கிய அந்தப் படத்தில் சீனுக்கு சீன் சுவாரஷ்யங்கள். அதே இயக்குநரின் கைவண்ணத்தில் தயாரான இந்தப் படத்தில் மருந்துக்குக் கூட அப்படிப்பட்ட காட்சி இல்லை.
எவ்வளவு பட்ஜெட்டை கொடுத்தாலும் தாங்கக்கூடிய தயாரிப்பு நிறுவனம், காட்சிக்காக எந்த லெவலுக்கும் கீழே இறங்கி உடம்பை வருத்தி நடிக்கக்கூடிய ஹீரோ. இந்த இரண்டு விஷயங்களும் இந்தப் படத்தில் விஜய் மில்டனுக்கு பக்காவாக அமைந்து விட்டது.
அதை வைத்துக் கொண்டு ஒரு பரபர ஆக்ஷன், மசாலா, காமெடி ஜானரில் கலர்ஃபுல்லாக ஹைஸ்பீடில் இந்தப் படத்தை எடுத்திருக்கலாம்? ஆனால் அப்படியான எதுவும் இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.
விஜய் மில்டன் நல்லா கதை சொல்லுவார். சொல்ல ஆரம்பிச்சா கேட்டுக்கிட்டே இருக்கலாம். என்று இப்படத்தின் பிரஸ்மீட்டில் நிருபர்களை சந்தித்தபோது சொன்னார் ஹீரோ விக்ரம்.
அவர் சொன்னபடி கதை எங்கே? என்று தேடிப்பார்த்தால் அதற்கான அரிச்சுவடே இல்லை. ஒருவேளை விக்ரமிடம் சொன்ன கதையை விட்டு விட்டு வேறு எதையாவது எடுத்து விட்டார்களோ என்னவோ?
இருந்தாலும் நம் கண்ணுக்கு எட்டிய வரையில் படத்தில் கதை என்று சொல்லப்படுகிற விஷயத்தை சொல்லி விடுகிறோம்.
கதைப்படி ஹீரோ விக்ரமுக்கு பெயரே இல்லை. ஒரு சீனில் ஜேம்ஸ்பாண்ட் என்பார், இன்னொரு சீனில் மணிரத்னம் என்பார், அடுத்த சீனில் கவாஸ்கர் என்பார். இப்படி வெவ்வேறு பெயர்களுடன் வேலைகளைச் செய்கிறார். அவருடைய ஸ்பெஷாலிட்டியே எந்த ஒரு வேலையைக் கொடுத்தாலும் 10 செகண்ட்டுக்குள்ள அதை சின்சியராக செஞ்சு முடிச்சுடுவார்.
அப்படி ஒரு ஹைவேஸ் வேகத்தில் இருக்கும் விக்ரமிடம் வில்லனாக வரும் பசுபதி ஒரு கடத்தல் வேலையைக் கொடுக்கிறார். அந்த கடத்தல் வேறு யாருமில்லை. கதாநாயகி சமந்தா தான். சென்னையிலிருந்து அவரை உத்ரகாண்ட்டுக்கு ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டு வர வேண்டும்.
இந்த இடத்தில் கதாநாயகனோ, கதாநாயகியோ என்ன செய்வார்கள்? கதைப்படி இருவரும் காதலித்து தானே ஆக வேண்டும்? ஆமாம், அதைத்தான் செய்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் எதற்காக சமந்தாவை வில்லன் கோஷ்டி கடத்தச் சொல்கிறது என்கிற விபரம் தெரியவர கடத்தலுக்கு அவர்கள் கொடுத்த கூலியோடு ஒரு ரூபாய் சேர்த்து கொடுத்து சமந்தாவை மீட்டு வர முயற்சிக்கிறார்.
அந்த முயற்சி என்னவானது? சமந்தாவை ஏன் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து கடத்துகிறார்கள்? என்பதற்கும் விக்ரம் ஏன் இந்த தொழிலில் இறங்கினார்? என்பதற்கும் உப்பு சப்பில்லாத திரைக்கதை, கேவலமான ட்விஸ்ட்டுகள் என் போரடிக்க வைத்து இனிமே புதுப்படம் பார்க்கும் ஆசையில தியேட்டருக்குள்ள வருவியா? என்று ரசிகர்களின் பொதடியில் வெடி வைத்து வெளியே அனுப்புகிறார்கள்.
அதோடு படம் சுபம்.
விக்ரமின் ஓப்பனிங் காட்சிகளில் காரின் வேகம் பரபரவென்று இருக்கவும் அடடா… ஒரு சூப்பரான ஆக்ஷன் படத்துக்குத்தான் வந்திருக்கோம் என்று நிமிர்ந்து உட்காருகிறோம். ஆனா, அதற்கடுத்தடுத்து வருகிற காட்சிகள் எல்லாம் உற்சாகத்தோடு போன ரசிகர்களை வரும்போது வீல் சேரில் கூட்டி வருகிற அளவுக்கு ரண வேதனையை கொடுக்கிறது.
கார்த்தியின் ‘பையா’ விக்ரமின் ‘ராஜபாட்டை’ இரண்டு படங்களின் சாயலை படம் முழுக்க பார்க்க முடிகிறது. பட் அதில் ‘ராஜபாட்டை’யின் பங்கு அதிகமாகியிருக்கிறது.
விக்ரம் யாரோ? சமந்தா யாரோ? ஆனாலும் இருவருக்கும் காதல் வருகிறது. அதில் எந்த ஈர்ப்பும் இல்லை. ஒரு காட்சியில் சமந்தாவின் நெற்றியில் முத்தமிடுகிறார் விக்ரம். அது காதலிக்கான முத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக ஒரு அப்பா மகளுக்கு முத்தம் கொடுப்பது போன்ற எண்ணத்தைத் தான் ரசிகர்களிடையே உண்டாக்குகிறது. அப்படி ஒரு பெரிய வயது வித்தியாசம் இருவருக்குமான கெமிஸ்ட்ரியில் கண்ணாபின்னாவென்று விளையாடியிருக்கிறது.
சமந்தாவின் பல குறும்புகளை சில இடங்களில் ரசிக்கலாம். அதுவே ஆறுதல் என்று மனசை தேத்திக்கொண்டால் கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட்டை வைத்து அந்த ஆறுதலையும் பிடுங்கிக் கொள்கிறார்கள்.
வட நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சாதிப்பிரச்சனையை தீர்ப்பதற்கு தமிழகத்தில் இருந்து கிளம்பிப் போகிறாராம் விக்ரம். அடங்கப்பா… காதுல பூ சுத்தலாம் தான். அதுக்காக இப்படியா…?
மனோபாலா, முண்டாசுப்பட்டி ராமதாஸ், சான் ஆண்டர்சன், தம்பி ராமையா இத்தனை பேர் இருந்தும் ஒரு இடத்திலாவது ரசிகர்களை சிரிக்க வைச்சிருக்கணும், ஆனா அதை செய்றதுக்கு படம் முடியிற வரை மனசே வரலையே இயக்குநருக்கு. நல்லவேளையாக ராகுல் தேவ், அபிமன்யு சிங் என இரண்டு வில்லன்கள் இருந்தார்கள்.
பாடல்களுக்கு இசை டி.இமானாம். ஆனாலும் இந்த மயக்கம், விரூம் விரூம் பாடல்கள் மட்டுமே கேட்கும் ரகம். மற்றடி ஏங்க நல்லாத்தானே வண்டி போய்க்கிட்டிருக்கு அப்புறம் ஏன் 10 எண்றதுக்குள்ள பேரை கெடுத்துக்குறீங்க..? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. படத்துக்கு பின்னணி இசை அவர் இல்லை. அதனால் க்ரேட் எஸ்கேப்.
கார் சேஸிங் உள்ளிட்ட காட்சிகளில் கிராபிக்ஸ் வேலைகளில் கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்கலாம். ரெண்டேகால் மணி நேரம் ஓடுற படத்தை நாள் முழுக்க உட்கார்ந்து பார்த்த மாதிரி ஒரு பயங்கர பீலிங்க்ஸ்! எடிட்டிங்கில் கூடுதலாக 5 சீன்களை வெட்டி எறிந்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம்.
பொதுவா ‘ரோட் மூவி’ன்னாலே அதுக்கு திரைக்கதை சரியான கலவையில் இருக்க வேண்டும். இல்லை என்றால் படத்தை அடுத்தடுத்த காட்சிகளில் நகர்த்திக் கொண்டு போவது மிகவும் கடினம். அந்தக் கடினம் தான் இப்படத்தின் வெற்றிக்கு பெரிய கடிவாளம் போட்டிருக்கிறது.
நமக்கு கோயம்பேடு மார்க்கெட்டு தான் சரி. திடீர்னு சூப்பர் மார்க்கெட்டுக்கு போனா இப்படித்தான்
ரெண்டாவது படத்திலேயே பெரிய பேனர், பெரிய ஹீரோ, ஹீரோயின், அழகான லொக்கேஷன்கள்னு ஒரு நல்ல செட்டப் அமைஞ்சிருக்கு அதை சரியாப் பயன்படுத்திக்காம 10 பேர் சேர்ந்து அடிச்சா எப்படி ஒரு ரண வேதனை வருமோ அதை அப்படியே கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்!