சீமராஜா விமர்சனம் #SeemaRaja
RATING – 2.5/5
நடித்தவர்கள் – சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, லால், சிம்ரன், நெப்போலியன் மற்றும் பலர்
இசை – டி.இமான்
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம்
இயக்கம் – பொன்ராம்
வகை – நாடகம், காமெடி, ஆக்ஷன்
சென்சார் பரிந்துரை – ‘U’
கால அளவு – 2 மணி நேரம் 38 நிமிடங்கள்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘சீமராஜா’.
சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த சிவகார்த்திகேயனுக்கும், பக்கத்து ஊரான புளியம்பட்டியைச் சேர்ந்த பணக்கார குடும்பமான லாலுக்கும் மக்கள் மத்தியில் யார் ராஜா? என்பதில் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
அடிக்கடி மோதிக்கொள்ளும் இருவரும் இரண்டு ஊர்களுக்கு பொதுவாக இருக்கும் சந்தையை கைப்பற்றும் போட்டியில் நீதிமன்றம் வரை சென்று இழுத்து மூடி விடுகிற அளவுக்கு பிரச்சனை போய் விடுகிறது.
இதற்கிடையே புளியம்பட்டியைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியரான சமந்தாவை காதலிக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தக் காதலுக்கும் லால் வில்லனாக வர, சந்தையையும், சமந்தாவையும் லாலிடமிருந்து சிவகார்த்திகேயன் எப்படி மீட்கிறார் என்பதே மீதிக்கதை.
காமெடிகளால் குழந்தைகளை கூட சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் இதில் சீமராஜாவாக கமர்ஷியல் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். மாஸ் ஆன எண்ட்ரி, பஞ்ச் பேசுவது, காதலி சமந்தாவுடன் காதல் குறும்பு செய்வது என துறுதுறுப்பான நடிப்பில் கவர்கிறார்.
வெறுமனே ஹீரோவை காதலிக்கிற கேரக்டராக இருந்து விடக்கூடாது என்பதற்காக இதில் உடற்பயிற்சி ஆசிரியராக வருகிற சமந்தா சிலம்பு சுற்றுகிற காட்சிகளில் கைத்தட்டல்களை அள்ளுகிறார். அசால்ட்டாக அவர் சிலம்பம் சுற்றுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
வழக்கம் போல சிவகார்த்திகேயனின் நண்பனாக இதிலும் வருகிறார் சூரி. சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். ஆனால் காமெடி நடிகரான அவரை விட வருகிற சீன்களில் எல்லாம் சிரிப்புக்கு முழு உத்திரவாதம் தருகிறார் வில்லன் லால் உடன் இருந்து கொண்டே அவரையே அவ்வப்போது வாரி விடும் பவுன்ராஜ்.
ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த நெப்போலியனை விட நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள் லாலும், அவரது மனைவியாக வரும் சிம்ரனும். இதுவரை பார்த்திராத வில்லி கேரக்டரில் அசத்த முயற்சித்திருக்கிற சிம்ரன், கொஞ்சம் வெயிட் போட்டிருந்தால் கேரக்டரும் வெயிட்டாக இருந்திருக்கும்.
பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் கீர்த்தி சுரேஷ் லுக்கில் அப்படியே ‘நடிகையர் திலகம்’ படத்தை ஞாபகப்படுத்துகிறார்.
டி.இமானின் இசையில் மாஸ் ஹீரோவுக்குரிய பின்னணி இசையில் எந்தக்குறையும் வைக்கவில்லை. ஏற்கனவே கேட்டது மாதிரி இருந்தாலும் ‘மச்சக்கன்னி’ பாடலை மெய் மறந்து ரசிக்கலாம்.
ஆர்ட் டைரக்டர் முத்துராஜின் உழைப்பை அப்படியே கண்முன் கொண்டு வந்து கலர்புல்லாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்.
சீமராஜா என்று டைட்டில் வைத்து விட்டதாலேயே ஜமீன் பரம்பரையின் ப்ளாஷ்பேக் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு நீளமான காட்சி தேவையா? என்பதை யோசித்திருக்கலாம்.
படத்தில் பல இடங்களில் திணிக்கப்பட்டிருக்கும் தேவையில்லாத செலவை குறைத்திருக்கலாம்.
‘அரைச்ச மாவை திருப்பி அரைக்கிறதுக்கும் ஒரு திறமை வேணும்’ என்று படத்தில் ஒரு பாடல் வரி வருகிறது.
இதுவும் அப்படிப்பட்ட கதை தான் என்று சொல்லாமல் சொல்லி மேக்கிங்கில் மட்டுமே பிரம்மாண்டத்தை காட்டி வழக்கமான காதல், காமெடி என தனது ஃபார்முலா படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.