“80’ஸ் பில்டப்”ல் காதல் மன்னனாக வலம் வருகிறார் சந்தானம்-தங்கதுரை!
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நடிகர் தங்கதுரை பேசும் போது,
“இது அண்ணன் சந்தானத்துடன் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடித்திருக்கும் அடுத்த படம். படத்தின் தலைப்பிலேயே பில்டப் இருப்பதால் நானும் கொஞ்சம் பில்டப்பாகவே வந்தேன். எல்லா படங்களிலும் அண்ணன் சந்தானம் காமெடி மன்னனாக வலம் வருவார். இப்படத்தில் காதல் மன்னனாக வருகிறார். அவருடைய டிரஸ், ஹேர் ஸ்டைல் எல்லாமே படு ஸ்டைலாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் எல்லோருமே அவரைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருப்போம். பெயரிலேயே தானம் இருப்பதாலோ என்னவோ பலருக்கும் பல்வேறு வகைகளில் உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார். அவர் என்னிடம் ஒரு முறை, “தங்கதுரை இனி நீ தாண்டா எல்லா ஹீரோக்களுக்கும் ப்ரெண்டு” என்று கூறினார். இப்படத்தில் நான் அவருக்கே ப்ரெண்டாக நடித்து இருக்கிறேன். எல்லோருடைய காதலுக்கும் அவர் தூது போய் உதவி செய்வார். இப்படத்தில் அவரின் காதலுக்கு நான் தூது போய் உதவி செய்கிறேன். அவர் சொன்னது போலவே இன்று பல நாயகர்களுக்கு நண்பனாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதற்காக அவருக்கு நன்றி. இயக்குநர் கல்யாணின் திரைப்படங்கள் எல்லாமே குடும்பத்தோடு பார்க்க ஏற்ற திரைப்படங்கள். அவரின் படங்களுக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வரும். அவர் வைகை எக்ஸ்பிரஸ் போல ஒரு சினிமா எக்ஸ்பிரஸ், அவ்வளவு வேகமாக காட்சிகளை படம் ஆக்குவார். படப்பிடிப்பு தளம் நேரு ஸ்டேடியத்தில் அவார்டு ஃபங்ஷன் நடக்கும் இடம் போலவே இருக்கும். எங்கு திரும்பினாலும் கேமராக்கள் இருக்கும். 42 ஆர்டிஸ்டுகள் காரில் வந்து இறங்கிக் கொண்டே இருப்பார்கள். கல்யாணுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். ஜாலியாக வேலை வாங்குவார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முகத்தில் எப்பொழுதுமே சிரிப்பு இருக்கும். அவர் வந்தாலே நமக்கு எனர்ஜி தான். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் நடித்தது மிகப்பெரிய பாக்கியம். அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும். அது போல் மன்சூர அலிகான், முனிஸ்காந்த், கிங்க்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இருப்பார்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு பில்டப் உண்டு. 2கே கிட்ஸ் பைக்கில் வீலிங் செய்கிறேன் என்று அந்தப் பொண்னை தோளில் உக்கார வைத்துக் கொள்வார்கள். 90ஸ் கிட்ஸ் பஸ்சின் பின்புற படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருவார்கள். அந்தப் பெண் பஸ்சில் முன்னாள் இருக்கும். 80ஸ் கிட்ஸ் மலை மீது இருக்கும் பெண்ணை மலையடிவாரத்தில் இருந்து காதலிப்பார்கள். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 2கே கிட்ஸ் பாக்குற பொண்ணை எல்லாம் லவ் பண்ணுவாங்க, 90ஸ் கிட்ஸ் பாக்காமலேயே காதலிப்பாங்க.. இந்த 80ஸ் கிட்ஸ் பொண்ணே இல்லாம காதலிப்பாங்க.. இதை ஏன் சொல்கிறேன் என்றால், அசுரன் படத்தில் வடக்கூரான் கதாபாத்திரத்தில் மிரட்டிய ஆடுகளம் நரேன் சார், இந்த 80ஸ் பில்டப் படத்தில் பெண் வேடத்தில் இருக்கும் ஆனந்தராஜ் சாரை உருகி உருகி காதலிக்கிறார். இந்த வருடம் சிறந்த நடிகைக்கான விருது ஆனந்த்ராஜ் சாருக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று பேசினார்.