ட்ராப் ஆனது ‘சண்டக்கோழி 2′ : லிங்குசாமி மீது விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பது தமிழ் ரசிகர்களிடையே வாடிக்கையாகி விட்டது.
அப்படி எதிர்பார்க்காத சில படங்களும் கூட சில நேரங்களில் இரண்டாம் பாகமாக தயாராவதும் உண்டு. அப்படித்தான் விஷாலின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் ‘சண்டக்கோழி’. லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்த இப்படம் கடந்த 2005ம் ஆண்டு ரிலீசானது.
அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அப்போது எந்த யோசனையும் இல்லாமல் இருந்த நிலையில் ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வர இருக்கிறது என்று கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ரஜினிமுருகன்’ ஆடியோ பங்ஷனில் அறிவித்திருந்தார் டைரக்டர் லிங்குசாமி.
அதோடு கதை விவாதமும் நடைபெற்று வந்த நிலையில் ‘மருது’ படத்தை முடித்த கையோடு ‘சண்டக்கோழி 2’ படத்துக்கு கால்ஷூட் ஒதுக்கியிருந்தார் விஷால்.
வருகிற மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று உறுதியான நிலையில் இன்று திடீரென்று ‘சண்டக்கோழி2’ படம் நிறுத்தப்பட்டதாக அறிவித்திருக்கிறார் நடிகர் விஷால்.
மேலும் இயக்குநர் லிங்குசாமி மீதும் அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது : “சினிமாவின் உள்ள படைப்பாளிகளில் சிலர் தங்கள் வேலையின் மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
இயக்குநர் லிங்குசாமி சொன்ன வாக்கை காப்பாற்ற தவறி விட்டார். நடிகர்கள் நடிப்பதிலும், இயக்குநர்கள் படங்களை இயக்குவதிலும் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லது. ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் கைவிடப்படுகிறது” என்று கூறியிருக்கிறார் விஷால்.
ஒரு இயக்குநராக ஜெயித்து வந்த லிங்குசாமி கமலை வைத்து தயாரித்த ‘உத்தம வில்லன்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் தான் பெரிய அளவில் பைனான்ஸ் சிக்கலை சந்தித்து வந்தார். தற்போது ‘பையா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கப் போய் விட்டதால் ‘சண்டக்கோழி 2’ படத்தை தொடங்காமல் காலம் தாழ்த்தியதாகத் தெரிகிறது. அவரின் அந்த நடவடிக்கை தான் விஷாலை இப்படி வருத்தமடையச் செய்திருக்கிறது.
எது எப்படியோ ஒரு பெரிய வெற்றிக்கூட்டணி உடைந்து விட்டதில் ரசிகர்களுக்கும் வருத்தம் தான்.