ரஜினியை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ்! – பேசியது என்ன?
வருடத்துக்கு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினி கடந்த சில ஆண்டுகளாக படங்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்.
அந்த வகையில் ‘காலா’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அதுபோக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2 பாயிண்ட் ஒ’ திரைப்படமும் நவம்பர் 29-ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இப்படி சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதை அதிகரித்திருக்கும் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்? என்பது தான் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை நேரில் சந்தித்து கதை ஒன்றைச் சொன்னதாகவும், அது ரஜினிக்குப் பிடிக்காததால் வேண்டாம் என்று சொல்லி விட்டதாகவும், பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸின் அந்தக் கதையில் ரஜினி நடிக்க சம்மதம் சொன்னதாகவும் செய்திகள் வெளியானது.
இது குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்த ஏ.ஆர் முருகதாஸ் ரஜினி உடனான சந்திப்பை தற்போது உறுதிப்படுத்தியிருக்கிறார்.
”ரஜினி சாரை நான் நேரில் சந்தித்தது உண்மை தான். அவரை சந்தித்து அவருக்கான முழுக்கதையையும் கூறினேன். நாங்கள் இருவரும் இணைந்து அடுத்த படத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சீக்கிரமாகவே அது அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது”என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
சர்கார் டைரக்டருடன், சர்காரை நடத்த விரும்பும் ரஜினி இணைவாரா? வெயிட் பண்ணிப் பார்ப்போம்.