தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக அறிமுகமாகி இருக்கும் சான்வே மேக்னா!

Get real time updates directly on you device, subscribe now.

இந்த வருடம் 2025ல் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியில் நடிகை சான்வே மேகன்னாவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. வெண்ணிலா கதாபாத்திரத்திற்கு அவரது இயல்பான மற்றும் ஆழமான நடிப்பு, ரசிகர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது. ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து திரைத்துறை வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு எதிர்பாராத விதமாகதான் வந்தது. ஹைதராபாத்தில் சான்வே படித்துக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதை கணித்த நடிகை ஜெயசுதா சான்வேக்கு முதல் பெரிய வாய்ப்பை கொடுத்தார். அந்த தருணம்தான் சான்வேக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. கடந்த ஏழு ஆண்டுகளில் ’பிட்ட காதலு’ (நெட்ஃபிலிக்ஸ்), ’புஷ்பக விமானம்’ மற்றும் ’பிரேம விமானம்’ ஆகிய படங்களின் மூலம் அவர் தனது சினிமா கரியரில் முன்னேறியுள்ளார். ஆனால், ’குடும்பஸ்தன்’ திரைப்படம் அவரை இன்னும் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி சென்றுள்ளது.

‘குடும்பஸ்தன்’ படம் கதாநாயகியாக அவருக்கு பெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்து ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர், தீவிரமான ஸ்போர்ட்ஸ் கதை, ரொமாண்டிக் காமெடி போன்ற வித்தியாசமான கதைத்தேர்விலும் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறார். இதுபோன்ற கதைகளில் முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்த முடியும் என்கிறார்.

“’குடும்பஸ்தன்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பலரும் தங்களுடன் பொருத்திக் கொண்டார்கள். ரசிகர்கள் கொடுத்து வரும் பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். நடிகை ஸ்ரீதேவியை தனது இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லும் சான்வே, அவரைப் போலவே இயல்பான நடிப்பை திரையில் கொண்டு வர வேண்டும் என்கிறார். தனது திறமை, அர்ப்பணிப்பு மீது நம்பிக்கைக் கொண்டிருக்கும் சான்வே நிச்சயம் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடிப்பார்.