‘பிங்க்’ ரீமேக், பூஜை போட்டாச்சு – ‘அஜீத் 59’ படப்பிடிப்பு ஆரம்பம்!

Get real time updates directly on you device, subscribe now.

சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘விஸ்வாசம்’.

வரும் 2019 பொங்கல் வெளியீடாக வர இருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கப் போகும் புதுப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

அதன்படி ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிக்கப் போகும் புதுப்படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

அஜீத் நடிப்பில் ‘பில்லா’, ‘மங்காத்தா’ மற்றும் ‘ஆரம்பம்’ படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள். இந்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.

Related Posts
1 of 32

படம் வருகிற 2019ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி அஜீத் பிறந்த நாள் அன்று ரிலீசாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இன்னொரு படத்தையும் தயாரிக்கிறார் போனிகபூர். அந்தப்படம் 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகின்றன.

‘அஜீத் 59’ குறித்து பேசிய தயாரிப்பாளர் போனிகபூர் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜீத்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் அஜீத் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜீத் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக் கொண்டார்.

தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். அஜீத் என் மனைவி ஸ்ரீதேவியுடன் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நானும் அஜீத்தும் ஒரு படத்தில் இணைய மிகுந்த ஈடுபாட்டுடன் காத்திருந்தோம். நாங்கள் இருவருமே எங்கள் இருவரது கேரியரிலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பொருத்தமான கதையை தேடினோம். அப்படி ஒரு படமான ‘பிங்க்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.