‘விஸ்வாசம்’ படத்தின் உண்மையான வசூல்! – தயாரிப்பாளர் தியாகராஜன் ஓப்பன் டாக்
சிவா டைரக்ஷனில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘விஸ்வாசம்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அன்றைய தினம் ரஜினியின் பேட்ட படமும் ரிலீசானதால் இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியானது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் தான் வசூலில் முதலிடத்தில் இருந்தது என்றெல்லாம் ரஜினி – அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டார்கள்.
ஆனால் இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து தயாரிப்பாளர் தரப்பு மெளனம் தான் காத்தது.
தற்போதும் விஸ்வாசம் படம் பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 50-வது நாளை நெருங்கும் இந்த சமயத்தில் அந்தப்படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு என்பது குறித்து தயாரிப்பாளர் தியாகராஜன் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
“விஸ்வாசம் படம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் படம். இதற்கான பாராட்டு அஜித், இயக்குநர் சிவா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் தான் செல்ல வேண்டும். தமிழகத்தில் மட்டும் 125 கோடி முதல் 135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகஸ்தர்களின் வாழ்நாள் பங்கு என்பது 70 கோடி முதல் 75 கோடி வரை கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு முன்னதாக ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இனி எடுக்கப்படுகின்ற கமர்ஷியல் படங்கள் எல்லாம், பெண் ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்பட வேண்டும். அவர்களுக்குப் பிடித்தால் படம் மிகப் பெரும் வசூல் செய்யும்” என்றும் கூறியிருக்கிறார்.
இதன்மூலம் ‘பேட்ட’- ‘விஸ்வாசம்’ படங்கள் முதல் வார வசூல் சம்பந்தமாக இரண்டு படங்களின் விநியோகஸ்தர்களும் 100 கோடி, 200 கோடி என்று வெளியிட்ட வசூல் கணக்குகள் தவறானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.