அஜித்தால் ஆறு மாசம் நஷ்டப்பட்டேன்! : புரமோஷன் மேடையில் பொங்கிய டைரக்டர்
வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை தானே தவிர, தமிழில் சிறந்த படங்களின் வரிசையில் எப்போதுமே ‘அவள் பெயர் தமிழரசி’க்கு நிச்சய இடமுண்டு.
அதைத் தொடர்ந்து இயக்குநர் மீரா கதிரவன் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக தயாரித்து இயக்கியிருக்கும் படம் தான் ‘விழித்திரு.’
விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா, டி.ஆர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் பல சோதனைகளுக்குப் பிறகு ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது.
படத்தின் புரமோஷனுக்கு இரண்டு ஹீரோக்களில் ஒருவரான கிருஷ்ணா, நாயகி தன்ஷிகா என படத்தில் வேலை செய்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அத்தனை பேரும் ஆஜராகியிருந்தார்கள்.
இன்னொரு ஹீரோவான விதார்த் மட்டும் நோ எண்ட்ரி.
”முந்தைய படத்தில் நான் ஒரு இயக்குநராக மட்டும் தான் இருந்தேன். ஆனால் இதில் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். அதன் வலி எனக்குத் தான் தெரியும்” என்று பேச ஆரம்பித்தார் மீரா கதிரவன்.
”சில ஹீரோக்கள் போஸ்டர்ல என்னோட போட்டோ வரல, பேர் பெருசா வரலேன்னு கம்ப்ளெயிண்ட் பண்றாங்க. ஆனால் புரமோஷனுக்கு கூப்பிட்டா வர்றதே கிடையாது. இந்தப் படத்தோட புரமோஷனுக்கு விதார்த் ஏன் வரலேன்னு தெரியல. என்றவர் உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்துறேன் என்று அஜித் சம்பந்தப்பட்ட சமாச்சாரம்” ஒன்றைச் சொல்லி புயலைக் கிளப்பினார்…
”இந்தப் படத்தில் விதார்த் நடித்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஒருநாள் இப்படத்தின் பி.ஆர்.ஓவும் அஜீத்தின் மேனேஜருமான சுரேஷ் சந்திரா விதார்த்தைக் கூட்டிக்கொண்டு என்னிட வந்தார். “உங்ககிட்ட அஜீத் சார் பேச சொன்னார்” என்று கூறினார். அஜீத் சாரே எங்கிட்ட பேச சொன்னாரா? என்று நான் ஆச்சரியத்தோடு கேட்டேன். “ஆமாம்” என்று கூறிய சுரேஷ் சந்திரா,
‘வீரம்’ படத்தில் விதார்த் நடிக்கிறார். அந்த படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகள், உங்கள் படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகளோடு கிளாஷ் ஆவதால், உங்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க சொன்னார்” என்றார்.
என்னுடைய படம் இரவில் நடக்கின்ற படம். அதேபோல இதில் சுமார் 20 நடிகர், நடிகைகள் காம்பினேஷனில் விதார்த் நடிக்கிறார். அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் படப்பிடிப்புக்கு வரச்சொல்லி வேலை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமில்லை. இருந்தாலும் அஜீத் சார் சொல்லி அனுப்பியிருக்கிறாரே என்கிற ஒரே காரணத்துக்காக ஒரு மாதம் தேவை என்று கேட்டதால் என்னுடைய படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளி வைத்தேன். ஆனால் 6 மாதங்கள் கழித்து தான் விதார்த்துடன் அந்த 20 பேர் கொண்ட காட்சிகளை என்னால் எடுக்க முடிந்தது.
அந்த ஆறு மாத செலவை யார் ஈடு செய்வது? ஒரு தயாரிப்பாளராக ஆன பிறகு தான் இது போன்ற வலிகளையெல்லாம் என்னால் உணர முடிந்தது என்றார் இயக்குநர் மீரா கதிரவன் வேதனையோடு.
ரெண்டாவது படத்திலேயே தயாரிப்பாளர்களின் வலியை உணர்ந்து கொண்டார் இயக்குநர். பல படங்களில் ஹீரோவாக நடித்த அஜித்துக்கு தயாரிப்பாளர்கள் வலி தெரியாதா? அல்லது அந்த வலிகள் அவரது காதுகளை எட்டவில்லையா?