அதானே, விஜய் – அஜித் ரசிகர்களை மோத விடலேன்னா உங்களுக்கு தூக்கம் வராதே?

முன்பெல்லாம் விஜய் படமோ? அல்லது அஜித் படமோ? ரிலீசாகும் நாளில் தான் இரண்டு பேரின் ரசிகர்களும் அடித்துக் கொள்வார்கள்.
ஆனால் இப்போது அப்படியில்லை, இரண்டு பேரில் யாராவது ஒருவர் நடித்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வந்தாலே விடிய விடிய தூங்காமல் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
இதற்கு முன்பு அரசல் புரசலாக இருந்த இரண்டு பேரின் ரசிகர்களின் மோதலும் சமீபகாலமாக சந்தி சிரிக்கிற வகையில் எல்லையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
”வேதாளம்” படத்தை விஜய் ரசிகர்கள் கிழித்து தொங்கவிட பதிலுக்கு விஜய்யின் ”புலி” படத்தை கிழி கிழியென்று கிழித்து தொங்க விட்டார்கள்.
இப்படி நாளுக்கு நாள் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் அதிகரித்தாலும் அஜித்தும், விஜய்யும் மறந்தும் கூட வாய் திறக்காமல் ரசிகர்களின் சண்டையை புண்முறுவலோடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
ட்விட்டரில் பிரபலமான இவர்களின் சண்டையைப் பார்த்த ஊடகங்களும் சும்மா இருப்பதில்லை. அவ்வப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? நடிப்பில் யார் நம்பர் 1? நடனத்தில் யார் நம்பர் ஒன்? வசூலில் முந்தியது யார்? இப்படி ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு அதை கருத்துக் கணிப்பாக வெளியிட்டு பரபரப்பை உண்டு பண்ணும் வேலையும் அவ்வப்போது செய்கிறார்கள்.
சமீபத்தில் கூட விஜய் டிவியின் ‘நீயா நானா’வில் இரண்டு பேரின் ரசிகர்களும் கலந்து கொண்டு நேருக்கு நேர் விவாதம் நடத்தினார்கள்.
இப்படி எதற்கெடுத்தாலும் மோதிக்கொள்ளும் விஜய் – அஜித் ரசிகர்களின் சண்டையை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடைபெறப்போகும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு பயன்படுத்தினால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்திருக்கிறது நடிகர் சங்க நிர்வாகக்குழு.
ஆமாம், வருகிற ஏப்ரல் மாதம் 10ம் தேதி நடைபெற இருப்பதாக சொல்லப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டிக்கு அஜித் – விஜய் அணி என்று பெயர் சூட்டி நடத்தினால் என்ன என்று ஆலோசித்து வருகிறார்களாம் விஷால் தலைமையிலான இளம் ஹீரோக்கள்.
அப்படி ஒரு போட்டியை நடத்தினால் அந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகும். அதோடு கட்டிடம் கட்டுவதற்கான கலெக்ஷனும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும் என்று கருதுகிறார்களாம்.
யோசனை நல்லாத்தான் இருக்கு, ஒரு நல்ல விஷயத்துக்காக அதையும் செஞ்சு தான் பார்க்கட்டுமே..?