நாயை வைத்து ஒரு காமெடிப்படம் : சும்மாவா விட்டது விலங்குகள் நலவாரியம்?

ஒரு காலத்தில் இராமநாராயணன் போன்ற இயக்குநர்கள் எல்லாம் நாய், பூனை, குரங்கு, யானை என விலங்குகளை வைத்தே டஜன் கணக்கில் ஹிட் படங்களைக் கொடுத்தவர்கள்.
ஒரு கட்டத்தில் ”விலங்குகள் நலவாரியம்” என்கிற அமைப்பு தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்கவும், அன்று முதல் அந்தச் செல்லப் பிராணிகள் திரைப்படங்களில் நடிப்பதையே பேக்கப் செய்து கொண்டன.
எல்லாம் அந்த ”நல வாரியம்” இயக்குநர்களுக்கு கொடுக்க ஆரம்பித்த டார்ச்சர்கள் தான் காரணம்.
ஒரு நாயை வைத்து முழுப்படத்தை எடுத்து முடிப்பதற்குள் விலங்குகள் நல வாரியம் கொடுக்கிற நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமில்லை. நாய் அதுவாகவே குரைத்தால் கூட ”ஏன் நாய் குரைக்கிற அளவுக்கு நடத்துகிறீர்கள்?” என்று அதன் இயல்பையே கேள்வி கேட்பார்கள் போல?.
அந்தளவுக்கு இம்சைகள் இருக்கும் என்று தெரிந்தும் நாயை கதையின் முக்கிய கதாபாத்திரமாக வைத்து ”ஜூலியும் 4 பேர்களும்” என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சதீஷ். ஆர்.வி.
அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவர் சினிமா மீதுள்ள காதலால் பத்து வருடங்களாக சம்பாதித்து சேமித்து வைத்த மொத்த பணத்தையும் போட்டு இந்தப்படத்தை தானே தயாரித்து இயக்கி படத்தில் வருகிற நான்கு நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். அமுதவாணன், ஜார்ஜ் விஜய் யோகானந்த் ஆகியோர் மற்ற ஹீரோக்கள். ”மானாட மயிலாட” புகழ் மானசா தான் படத்தின் நாயகி.
அமெரிக்காவில் வேலை செய்தவருக்கு அங்குள்ள நாய் கடத்தல் பற்றிய சமாச்சாரம் சதா மூளையைக் குடைந்து கொண்டே இருந்திருக்கிறது. அதையே தான் இப்போது இந்தப்படத்தின் கதைக்களமாக ஆக்கியிருக்கிறார்.
”அமெரிக்காவுல நாய் என்றைக்குமே தானாக காணாமல் போகாது. அதை கடத்துவார்கள். அங்கு நாய் வளர்ப்பு அதிர்ஷ்டமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்தளவுக்கு அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஒன்றாகி விட்ட நாயைக் கடத்துவது அங்கு சர்வ சாதாரணம். நாயை வளர்க்க வேண்டுமே என்பதற்காகவே விவாகரத்து வாங்காமல் சேர்ந்து வாழ்கிற தம்பதிகள் கூட அங்கு இருக்கிறார்கள்.
அப்படி அதிர்ஷ்டத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிற நாயைச் சுற்றிய கதைதான் இந்தப் படத்தின் கதையும்!
“இடது காதில் மூன்று அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட ‘ஜூலி’ என்கிற அதிர்ஷ்ட நாய் அமெரிக்காவிலிருந்து நாய் கடத்தல் கும்பலின் தலைவன் மூலமாக தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது. அந்த நாய் இங்குள்ள தொழிலதிபர் ஒருவரிடம் விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் 3 இளைஞர்களும் சென்னையில் வசித்து வரும் ரஜினியின் தீவிர ரசிகராக ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் என்கிற இளைஞரும், நண்பர்களாகின்றனர். வேலை தேடி வந்த மூவரும் சென்னையில் ஒரு கன்சல்டன்சியிடம் பணத்தை பறி கொடுக்கின்றனர்.
விட்ட பணத்தை குறுக்கு வழியிலாவது சென்னையிலேயே சம்பாதிக்க நினைத்து, “ஜூலி நாயை” வாங்கிய தொழிலதிபரின் மகளிடமிருந்து அதை கடத்துகின்றனர்.
கடத்தப்பட்ட நாயை தேடி ஒருபுறம் தொழிலதிபர் இவர்களைத் துரத்த, நாயை வேறு ஒரு நாட்டு நபருக்கு விற்பதற்காக, நாயை தேடி வில்லனும் அவனது ஆட்களும் நால்வரையும் துரத்த, அதே சமயத்தில் ஜூலி என்ற பெண் ஒருவர் காணாமல் போக, குழப்பத்தில் போலீஸும் இவர்களை துரத்த, நால்வரும் செய்யும் கலாட்டாக்களை காமெடியாகச் சொல்லுவதுதான் ‘ஜுலியும் 4 பேரும்,” என்கிறார் இயக்குனர் சதீஷ்.
படத்தில் வரும் நாய் அமெரிக்கா பீகிள் என்கிற வகையைச் சேர்ந்த மிகவும் பாசக்கார நாயாம். தன்னை வளர்ப்பவர்கள் மீது அவ்வளவு பாசமாக இருக்குமாம். தன் வீட்டில் பாசத்தோடு வளர்த்து வந்த இந்த நாயையே படத்தில் நடிக்க வைத்து விட்டார் சதீஷ்.
நல்ல வேளையாக சொந்த நாய் என்பதால் சதீஷ் அதைப் பார்த்துக் கொண்ட விதத்தை நேரில் பார்த்த விலங்குகள் நல வாரிய அபிமானிகள் எந்த தொந்தரவும் தராமல் படப்பிடிப்பை நிம்மதியாக நடத்தி முடிக்க உதவி செய்தார்களாம்.