200 தியேட்டர்களில் அம்மா கணக்கு : தானாக அமைந்த ஹிட் செண்டிமெண்ட்!

படங்கள் தயாரிப்பதில் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு வித்தியாசமான கதையம்சங்களுடன் கூடிய கதைகளை கமர்ஷியல் கலந்து தயாரித்து அதை வெற்றிப்படங்களின் வரிசையில் நிற்க வைத்த பெருமை நடிகர் தனுஷையே சாரும்.
அந்த வரிசையில் அமலாபால் கதையின் நாயகியாக நடிக்க தனது உண்டர் பார் நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கும் படம் தான் ”அம்மா கணக்கு.”
அம்மா செண்டிமெண்ட் படங்கள் தமிழ்சினிமாவுக்கு புதுசு இல்லை என்றாலும் இப்படத்தின் இயக்குநர் ஒரு பெண் இயக்குநர் என்பதாலோ என்னவோ? வழக்கமான அம்மா செண்டிமெண்ட் படமாக இல்லாமல் புதுமையான திரைக்கதையை இந்தப்படத்துக்கு அமைத்திருக்கிறார்.
‘நில் பட்டே சன்னட்டா’ என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக்கான இந்தப்படத்தை அஸ்வினி அய்யர் திவாரியே தமிழில் ‘அம்மா கணக்கு’ என்ற டைட்டிலில் இயக்கியிருக்கிறார்.
தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ், ஹிந்திப்பட இயக்குநர் ஆனந்த் எல் ராயின் பட நிறுவனமான கலர் எல்லோ புரொடக்சன்ஸ் உடன் இணைந்து இந்த ‘அம்மா கணக்கு’ படத்தை தயாரித்திருக்கிறது.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் அமலா பால், சமுத்திரக்கனி, யுவா, ரேவதி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
அம்மாவுக்கும் – மகளுக்குமான பாசப்போராட்டத்தை மிக இயல்பாக சொல்ல வரும் இந்தப்படம் ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்கு முன்பு தனுஷ் தயாரித்த ”காக்கா முட்டை”, ”விசாரணை” இரண்டு வெற்றிப்படங்களும் 200 தியேட்டர்களில் தான் ரிலீஸ் ஆயின. அந்த ஹிட் செண்டிமெண்ட் இந்த அம்மா கணக்கு படத்துக்கும் தானாக அமைந்திருக்கிறது. ஆமாம் இந்த ‘அம்மா கணக்கு’ படமும் தமிழகத்தில் 200 தியேட்டர்களில் ரிலீசாகிறது.
”இந்தப்படம் நிச்சயம் அமலாபாலுக்கு தேசிய விருதை வாங்கித்தரும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் தயாரிப்பாளர் தனுஷ்!
நம்பிக்கை வெல்லட்டும்!